Thursday, June 22, 2006

"செல்லம்மாள்" பாரதி

நேற்று அதிகாலை House Drop-ல் வீட்டிற்கு போகும் வழியில், எல்லை இல்லாத, புத்தி எங்கெங்கோ சுற்றி மாகாகவியிடம் வந்து நின்றது. உடனே கைபேசியில் ஒரு reminder வைத்துவிட்டேன். பாரதியைப் பற்றி எத்தனையோ படைப்புகள். "பாரதி" என்றொரு திரைப்படம். மற்றும் இன்ன பிற இத்யாதிகள். ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் பொழுதும் என்னுள் எழுந்த கேள்வி, பாரதியின் மனைவி செல்லம்மாள் பற்றி.


எனக்கு பாரதியை திரைப்படம் மற்றும் ஊடகங்கள் வழியாக மட்டுமே தெரியும். அதனால் எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். கண்டிப்பாக பிழையிருக்கும். சுட்டிக் காட்டவும். பாரதியை மிகவும் மதிப்பவன் நான். அதற்காக நான் நினைப்பதை சொல்லாமல் இருக்க முடியாது. (அடச்சே! நிலைமையை பார்த்தா எல்லத்துக்கும் ஒரு disclaimer போட வேண்டியிருக்கே!!).


பாரதியை இருக்கும் வரை யாரும் மதிக்கவில்லை. சமுதாயம் அவன் இறந்த பிறகு வருத்தப்பட்டது. வருத்தப்படுகிறது. ஒரு வேளை பாரதி இப்பொழுது இதே மண்ணில் இருப்பதாய் வைத்துக் கொள்ளுங்கள். இன்னமும் அவனுக்கு அதே நிலைமை தானா? அதே treatment தானா? எனக்குத் தெரிந்த வரை விடை "ஆமாம்" என்பதே. அது சமுதாயத்தின் குற்றமல்ல. பின்னே குடும்பம், குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் கவிதை எழுதுவதும், பாடல் எழுதுவதும், நாட்டிற்காக உழைப்பதும் எப்படி சோறு போடும். நான் பாரதியை குறை கூறுகிறேன். காரணம், பாரதி ஒரு bachelor-ஆ இருந்திருந்தால் எப்படியோ வாழட்டும். ஆனால் சிறுவயதில் கல்யாணம் செய்வித்து, குடும்பபாரம் சுமப்பவர்கள் குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது தப்பென்று நினைக்கிறேன். பின் செல்லம்மாள் திட்டாமல் என்ன செய்வாள்.


பாரதி ஒரு கவிஞனாக, தமிழனாக, இந்தியனாக, மனிதனாக வேண்டுமானால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு கணவனாக, தந்தையாக அவர் வெற்றிப் பெற்றிருக்கிறாரா? ஒரு சாதாரண பிரஜையாக நினைத்துக் கொள்ளுங்கள். சுப்பிரமணி பாரதி என்னும் ஓர் மனிதன், செல்லம்மாள் என்ற மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். இவையே பாரதியின் குடும்பம். அவரின் தினசரி அலுவல் என்ன? தோட்டத்தில் நண்பர்களுடம் அமர்ந்து கொண்டு "இன்று இலக்கியம், அரசியல் எதுவும் வேண்டாம். வேறு ஏதாவது பேசுவோம்" என்று தான் தன் அலுவல்களை(?) பார்க்கிறார். தன் குழந்தைகள் பசியால் வாடும்பொழுது அதனைப் பற்றி கவலைப்படாமல், தூரத்தில் பிஜி தீவில் வாடும் இந்தியர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். "உன் கணவன் ஒரு ஏழை. உன் குடும்பம் பசியால் கிடந்து சாகவேண்டும் என்பது உன் விதி. ஆனால், பாரதி ஏழை இல்லை. அவன் ஒரு உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகை பார்க்கிறான்." என்கிறார். எனக்கென்னவோ இது MPD என்றே தோன்றுகிறது.


பாரதியின் கவிதைகளை பொருத்தவரை சொல்லப் போனால், பாரதி அந்த காலத்து கானா கவிஞர். வெண்பாக்களை பாடல்களாக வடித்த காலத்தில், அனைவருக்கும் புரியவேண்டும் என்று பேச்சுத் தமிழில் பாடல்களை, கவிதைகளை கொடுத்தவர். அதனாலேயே பலர் குறை கூறினர். என்ன இப்பொழுது அந்த கவிதைகள் "தூய" தமிழில் இருப்பதால் அவை மதிக்கப்படுகின்றன. உதா, அந்த காலத்து டப்பாங்குத்தான "மச்சானப் பாத்தீங்களா", இப்பொழுது classical ஆகவில்லையா?


செல்லம்மாள் என்ன பாவம் செய்தாள், இப்படி ஒருத்தருக்கு மனைவியாய் வாய்த்து துன்பப்பட? கலப்புத் திருமணம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்களுக்கு மத்தியில் தன் மகளுக்கு கலப்புத் திருமணம் செய்விக்க ஆசைப்பட்டார். ஆனால், செல்லம்மாள் அதனை தவிர்பதற்காக பிறந்தகம் சென்றாள். செல்லம்மாள் பார்வையில், அது தவறாகாது (இது நடந்தது சென்ற நூற்றாண்டு என்பதை நினைவில் கொள்க).


"நான் எத்தனையோ முறை உன்னை கை நீட்டி அடித்திருக்கிறேன்", "புருஷான்னா ஆம்படையாளை அடிக்கத் தான் செய்வா" என்று செல்லம்மாவின் பதில், அந்த காலகட்டத்தில் இருந்த பெண்ணடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.


இதுவே பாரதி ஒரு கவிஞனாக, சுதந்திர போராட்ட வீரனாக இருந்தத்னால் தானே நாம் இத்துனை negative-களுக்கு மத்தியிலும் பாரதியை மதிக்கிறோம். இந்த extra fittings இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.


"காலத்தை மீறி கனவு காண்பவர்கள் சக கால மனிதர்களாலேயே ஒதுக்கப்படுவார்கள்" என்று பாரதி உணர்ந்திருந்தால் செல்லம்மாள் இப்படி கஷ்டப்படவேண்டியிருந்திருக்காது. உணராததால் நமக்கு ஒரு பாரதி கிடைத்தார். (இதுக்குப் பேர்தான் Mutually Exclusive-வோ?)