Monday, October 29, 2007

இந்தியா Vs பாகிஸ்தான் - எ 60:60 மேட்ச்


பாகிஸ்தானை பற்றின ஒரு ஜோக் உண்டு.

மன்மோகன் சிங்: அணுயுத்தம் வந்தால் பாகிஸ்தானின் 14 கோடி பேரையும் ஒரு சைக்கிள்காரரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

புஷ்: யாரந்த சைக்கிள்காரர்?

மன்மோகன் சிங் (தன் செயலரிடம்): பார்த்தீங்களா? நான் சொல்லலை. 14 கோடி பாகிஸ்தானியரை பற்றி யாரும் கவலைபடமாட்டார்கள் என்று?



ஒரே மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகளாய், வெவ்வேறு பாதையில், வெவ்வேறு கொள்கைகளுடனும் செல்ல ஆரம்பித்து இன்று வரை நிற்காது அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றன இரு நாடுகளும். பிறக்கும் பொழுதே ஒரு அறுவை சிகிச்சை. அந்த வடு மறைவதற்குள் அடுத்தடுத்து பாகப்பிரிவினையில் சண்டை.



ஒப்பீட்டளவில் பார்த்தால்,




















இங்கேஅங்கே
ஜனநாயகம். "இந்திய ஜனநாயகம் சிறப்பாக உள்ளது" - பாக். சுப்ரீம் கோர்ட் பாராட்டு.
எல்லை மீறுவது, லஞ்சம். எல்லை மீறுவது பயங்கரவாதம்.
ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவது ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். ஜனநாயகத்துக்கு பணம் ஒதுக்குவது ஜனநாயாத்திற்கு சற்றேனும் தொடர்பில்லாத ராணுவ அதிபர்கள்.
கேள்வி கேட்க பணம் வாங்கினால் அதையும் எதிர்த்து கேள்வி கேட்கலாம். கேள்வி இருந்தால் தானே பணம்.
எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வலமிருந்து இடமாகத்தான் எழுதவேண்டும்.
ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்ப். ஜனாதிபதி / அதிபரை தவிர அனைவரும் ரப்பர் ஸ்டாம்ப்.
கோவிலுக்காக உண்டியல் குலுக்கல். தீவிரவாதத்துக்காக உண்டியல் குலுக்கல்.
ஊழல் அரசியல்வாதிகள் கூட சிறைக்கு செல்வதில்லை. அதிபர்களே தொங்கவிடப்படுவார்கள்.
குட்டி குட்டி அண்டை நாடுகளும் நம்மிடம் வாலாட்டும். வாலாட்ட பயிற்சி கொடுக்கப்படும்.
பணவீக்கத்திற்கு ஏற்ப பணம் அச்சடிக்கப்படுகிறது. இந்திய பணம் அச்சடிக்கப்படுகிறது.
இந்தியா ஜெயித்தால் இந்திய தேசிய கொடி பட்டொளிவீசி பறக்கும். பாகிஸ்தான் தோற்றால் இந்திய கொடி எரிக்கப்படும்.
ராணுவம் என்பது நாய்குட்டி போன்றது. ராணுவம் என்பது பூனைக்குட்டி போன்றது. (நாய்க்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியும் அல்லவா?)
மூன்றாம் உலக நாட்டிற்கு முதலில் ஓடி உதவி செய்வோம். பூகம்பத்திற்கு இந்தியா உதவினாலும் ஏற்க முடியாத நிலை.
வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தருவதில் உலக வங்கிக்கு நாம் செல்லப்பிள்ளை. கடன் வாங்கும் சூழ்நிலை எழவில்லை (முன்னேற்றம் பற்றி யோசித்தால் தானே...)
பசியை போக்க வெளிநாட்டிலிருந்து கடன். ஆயுதப் பசிக்காக வெளிநாட்டிலிருந்து கடன்.
அணுகுண்டு சோதனை. அடுத்த 15 நாட்களில் சீன அணுகுண்டு சோதனை.
நான் நிஜ துப்பாக்கியை தொட்டு கூட பார்த்ததில்லை. ???



ஒரு தாய் வயிற்றில் இருந்து பிறந்த குட்டிகளிடம் இவ்வளவு முரண்பாடுகள்.



இந்தியா உலக அளவில் கையூட்டு / ஊழல் ஆகியவற்றில் குறிப்பிட்ட இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. ஏழை பனக்காரன் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலத்திற்கு மாநிலம் எல்லை பிரச்சினை முதல் வேலை / தண்ணீர் பிரச்சினைகள். தனி நாடு கேட்டு போராடும் வட கிழக்கு மாநிலங்கள். மதக்கலவரங்கள் மறுபுறம். 1947-ல் பிறந்தவர் சீனியர் சிட்டிசன் ஆகியும் இன்னும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கூட கிடைப்பதில்லை. நாட்டை சுற்றிலும் நம்மையே மிரட்டும் குட்டி குட்டி நாடுகள். இத்தனை பிரச்சினைகள் இருந்தும் நாம் பாகிஸ்தானை விட கொஞ்சம் போல் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் நமக்காக தேர்ந்தெடுத்த பாதை. அது மக்களாட்சி. சீனாவுடன் ஒப்பிட்டால் நம் வளர்ச்சியின் வேகம் சற்று குறைவு தான். இதற்கு காரணம் சீனர் ஒருவர் சொல்வது போல, "எங்கள் ஊரில் அரசியல் உள்ளூர்மயமாகவும் நிர்வாகத்தை தேசிய அளவிலும் வைத்திருப்பதால் தான்". இந்தியாவிலோ இது தலைகீழ். அதனால் ஒப்பீட்டளவில் வளர்ச்சி சீனாவை விட குறைவு. ஆனால் இந்தியாவை விட பாகிஸ்தானிலோ நிலைமை இன்னும் மோசம். உள்கட்டமைப்பில் இருந்து எல்லாமே மோசம்.



காரணம் அங்கு நிலையான முக்கியமாக மக்களாட்சி ஆட்சி இல்லை. அதை விடவும் மக்களின் முன்னேற்றத்தை கண்டு கொள்ளாத அரசு. அங்கே உணர்ச்சி வேகத்தில் அரசியல் முடிவெடுக்கும் மக்களும் ஒரு காரணம். 1947 முதல் காஷ்மீர் என்ற வார்த்தை எத்துனை முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கும், அரசியலுக்காக? பரந்திருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்த ஒரே காரணத்தினால் எந்த செயலையும் நம்மோடு ஒப்பிட்டு பார்த்து ஒப்பிட்டு பார்த்தே வளர்ந்த நாடு. காஷ்மீர் கௌரவ பிரச்சினை ஆனது. இங்கே பட்டாசு வெடித்தால் அங்கே சீன பட்டாசு. இந்தியாவை உணவு உற்பத்தியில் முந்துவதை விட கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதை பற்றியே அதிகம் யோசிக்கும். "இ ஃபார் எனிமி" என்று பக்கத்தில் இந்திய வரைபடத்தை போட்டு சொல்லித்தரும் மதரசாக்கள். "ஐ ஹேட் இந்தியா" ஆர்குட் குழுவிற்கு எண்ணிலடங்கா உறுப்பிணர்கள் சேருவது என்று...



"வன்முறை என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதம். அது உபயோகப்படுத்துபவரையும் அழித்துவிடும்" - சொன்னவர் அறிஞர் அண்ணா. அவர் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு யாருக்கு பொருந்துதோ இல்லையோ, தற்போதைய சூழ்நிலையில் நம் அன்னாத்தே பாகிஸ்தானுக்கு பொருந்தும். என்ன தான் இருந்தாலும் நமக்கு ஒரு நாள் மூத்த அன்னாத்தேவாக பிறந்த தேசம் அல்லவா பாகிஸ்தான்? (இரட்டை குழந்தை என்றாலும் இரண்டாவதாக பிறப்பவர் தானே மூத்தவர்?)



பாகிஸ்தான் தன் வளர்ச்சிக்கு முந்துவதை விட இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொறுமியதே அதிகம். இந்தியாவை அதன் எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்ட நாடு. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது தன் வெளியுரவு கொள்கைகளில் ஒன்று என்பது போல செயல்பட்டது. ஆனால், இன்று அது தொடங்கிய தீவிரவாதம் அந்த தேசத்தின் இறையான்மைக்கே கேடு விளைவிக்கிறது. இது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல. அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும். ஏன்? இந்தியாவிற்கும் சேர்த்து தான். வளர்த்த கடா மார்பில் பாய்வது பழகி போன ஒன்றாகிவிட்டது தீவிரவாதத்துக்கு. முஜாகிதீன்களை வளர்த்த அமெரிக்காவாகட்டும், பின்லாடன் ஆகட்டும், ராஜீவ் மரணமாகட்டும், காஷ்மீர் தீவிரவாதிகளாகட்டும். இன்னும் எண்ணற்ற உதாரணங்கள்.



கொஞ்ச காலம் முன்பு இந்தியாவில் தீவிரவாதம் என்பது ஸ்பான்சர் செய்யப்படும் ஒரு முறையாகவே செயல்படுகிறது. இதற்கு முழு காரணமும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் உளவு அமைப்பு. 1965-ல் இந்தியாவுடனான போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு 1969-ல் விரிவுபடுத்தப்பட்டது. இதன் முக்கியமான வேலை இந்தியாவில் அதன் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது. இதன் செயல்பாடு பயங்கரமானவை. இது பாகிஸ்தானின் மிகுந்த அதிகாரமிக்க ஒரு அமைப்பு. பாகிஸ்தானில் ஒரு தனி அரசாங்கம் போல செயல்படும். அதாவது, யாருக்கும் கட்டுப்படாது. உள்ளூர் அரசியலுக்காக ஐ.எஸ்.ஐ செய்யும் வேலைகளை கண்டுகொள்ளாமல் இருந்தும் அதை ஊக்குவித்து கொண்டும் இருந்தது பாகிஸ்தான். அதெல்லாம் 9/11 வரை தான். 9/11 உலகின் பல நாடுகளின் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் பற்றி யோசிக்க வைத்தது. நடுவில் லண்டனில் நடந்த 7/7 வேறு சேர்ந்துக் கொண்டது. ஆனால், இந்த தேசங்களினால் இந்தியாவின் டிசம்பர் 13 கண்டுகொள்ளப்படவேயில்லை என்பது அமெரிக்க வெளியுரவு கொள்கைகளை அறிந்தவர்களுக்கு ஆச்சரியக்கூடிய விஷயம் அல்ல. வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது இதை வைத்து அமெரிக்க செலவில் தீவிரவாதிகளுக்கு வேட்டு வைக்கலாம் என்று முயற்சித்தார். அமெரிக்க, பிரிட்டன் கண்களுக்கு இவையெல்லாம் தெரியவேண்டுமா என்ன?

9/11 முழுமுதற் காரணகர்த்தாவாகிய பின்லாடனை தேடிப்பிடித்து கழுத்தை திருக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு. பின்லாடன் ஆப்கான் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டது வசதியாக போய்விட்டது. பின்னை தேடுகிறோம் லாடனை தேடுகிறோம் பேர்வழி என்று டேரா போட்டுக் கொண்டது. திருடனுக்கு அப்பொழுது தான் தேள் கொட்டியது. கத்தவும் முடியவில்லை. தாலிபான் விழுந்ததால் ஆப்கான் இப்பொழுது பாகிஸ்தானுக்கு குடைச்சல் கொடுக்கும் நாடு. ஆப்கானில் ஆண்கள் சவரன் செய்துவிட்டு வேலைக்கு போகிறார்கள். சதாமை அமெரிக்கா 'கொலை' செய்த பொழுதும் பேச முடியவில்லை. 9/11-க்கு பாகிஸ்தானும் மறைமுகமாக உதவியிருப்பது அமெரிக்காவுக்கு தெரியாமல் இல்லை. அதனை கண்டு கொள்ளாதது போல இப்பொழுது பாகிஸ்தானுடன் சேர்ந்து பின்லாடனை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு பணம் / நல்ல பிள்ளை பட்டம் கிடைக்கிறது. இவையெல்லாம் சேர்த்து உள்ளே இருக்கும் காஷ்மீரப் 'போராளிகள்' கைகள் இப்போதைக்கு கட்டப்பட்டுள்ளன. முஷரஃப்புக்கும் வேறு வழியில்லை. வேண்டும் என்னும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் பின் வேண்டாம் என்றால் எறிவதற்கும் அவர்கள் என்ன கறிவேப்பில்லையா? Trained professional போராளிகள். காஃபிர்களான அமெரிக்காவையும் இந்தியாவையும் எதிர்ப்பதற்காக மெருகேற்றப்பட்டவர்கள் இன்று பாகிஸ்தான் அரசாங்கம் பக்கம் தம் பார்வையை திரும்பியிருக்கிறார்கள். இப்பொழுது அவர்களின் முதல் எதிரி முஷரஃப்பாகி விட்டார். அதனால் தான் காஷ்மீரில் வெடிக்கவேண்டியதெல்லாம் இன்று பாகிஸ்தானுகுள்ளேயே வெடிக்கிறது.



எப்பொழுது ஒரு போராளிக்குழுக்கள் என்று கருதப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்களை கொல்ல ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களுக்காக ஆரம்பித்து கடைசியில் அவர்களையே கொன்றால்? காலிஸ்தான் இயக்கம் தன் சொந்த மக்களின் ஆதரவை இழந்த பிறகு தான் பலமிழந்தார்கள். அமெரிக்காவை எதிர்க்கிறேன் என்று தன் சொந்த சகோதரர்களையே தினம் தினம் கொல்வது ஈராக்கில் ஆரம்பித்து இன்று பாகிஸ்தான் வரை வளர்ந்திருக்கிறது. இதற்கிடையில் ஈராக்கில் ஷியா - சன்னி சண்டை வேறு. அதுசரி, இந்த சண்டை வரும் என்று தெரிந்து தானே சிறுபாண்மையின சதாமை புஷ் அன்ட் கோ 'கொலை' செய்தார்கள். இப்போது பாகிஸ்தான் மக்கள் தீவிரவாதம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வார்கள். அதனால் அவர்களல் இந்திய மக்களுடன் நெருக்கமாக உதவும். இது மேலும் அவர்களை மூர்க்கமாக்கும். அதனால் தங்களிடம் பட்டாசுகள் இருப்பு இருக்கும் வரை வெடித்துக்கொண்டே இருப்பார்கள். கராச்சியில் குண்டு வெடித்து ஆரம்பித்து, இஸ்லாமாபாத் மசூதி சம்பவம், சமீபத்தில் பேனசீர் நாடு திரும்புவது வரை சில்லரை சில்லரையாக மனித உயிர்கள் பலியாகின்றன. பெனசீரை 140 பேர் சொர்கத்திலிருந்து வெல்கம் அட்ரஸ் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு அப்பாவி பொதுமக்கள் இறக்கப்போகிறார்களோ?



ஒருவன் போராளியாக வேண்டும் என்றால் இந்த தேசத்தில் ஒரு தூப்பாக்கியோ வெடிகுண்டோ கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனால் பாகிஸ்தானில் அப்படி கிடைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லையே? இன்று அங்கே சதாரண சிவிலியன்கள் கைகளில் துப்பாக்கி கிடைப்பது இந்திய பணம் அச்சடிப்பது மாதிரி அவ்வளவு சுலபம். அப்பொழுது அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டது. இன்று அந்த துப்பாக்கிகளை இப்பொழுது அவர்களுக்கெதிராகவே உபயோகிக்கிறார்கள்.



சூழ்நிலை இப்பொழுது முஷரஃப்பை தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டியதாக போய்விட்டது. இது தற்போதைக்கு இந்தியாவுக்கு சாதகம் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதில் முக்கியமான விஷயம் பாகிஸ்தான் வசம் இருக்கும் அணு ஆயுதங்கள். இது பாகிஸ்தான் அரசாங்கத்திடம் (முஷரஃப்பிடம்) இருப்பது நமக்கு சேஃப். ஆயுதமோ அல்லது ஆயுதம் தயாரிக்கும் வழிமுறைகளோ கொஞ்சம் கசிந்தாலும் அதை காட்ச் பிடிப்பதற்கென்றே காத்திருக்கிறார்கள் பின்லாடனும் அல்-ஜவாஹிரியும். இந்த கசிவுகள் பாகிஸ்தனின் அணுத்தந்தை வழியாககே போயிருக்கவேண்டியது. கொஞ்சம் யோசித்து பாருங்கள். இவற்றில் கொஞ்சம் பின்லாடன் குரூப்புக்கு போனால் என்ன நடக்கும்? முதலில் சொன்ன ஜோக் தான் நடக்கும்...