Tuesday, April 22, 2008

'பிட்'தகோரஸ் தேற்றங்கள்

ஆய கலைகள் 64-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா என்ன கேட்டீங்கன்னா கட்டாயம் கூட ஒன்னு சேர்க்கனும்ங்க. ஆக மொத்தம் 65. 63 நாயன்மார்கள் கூட 64-வதா கிருபானந்த வாரியாரை சேர்க்கனும்னு சில பேர் குரல் கொடுத்தாங்க. அப்பவே இந்த 64+1 கலைகள் பத்தியும் பேசலாம்னு தான் இருந்தேன். ஆனா பாருங்க தனியா பேசுனா ஒரு மாதிரியா பாக்குறாய்ங்க. என்ன பன்னுறது? உலகம் அப்படி. உலகம் உருண்டைனு சொன்னதும் கொலம்பஸ்ஸை கூட அடிச்சாங்களாமே. அட! அது கொலம்பஸ் இல்லை தானே. வேற யாரு? அரிஸ்டாட்டில்???

சரி! விஷயத்துக்கு வருவோம். கல்லூரியில் படிக்கும்(?) போது இப்படித்தான் பல தடவை பல விதமா யோச்சிச்சு எப்படி 'பிட்' அடிக்கிறதுன்னு ப்ளான் பன்னுவோம். இங்க பிட்-னா படம் இல்ல. Patch update-னு வேனா சொல்லலாம். யோசிக்கிற நேரத்துல படிக்கலாமில்லன்னு நீங்க கேக்குறது புரியுது.
இருந்தாலும் பாருங்க அந்தந்த சிச்சுவேஷன்ல இருந்து பார்த்தாதான் எங்க நெலம புரியும்.


பள்ளிகூடத்துல படிக்கும் போது பிரச்சினை இல்லீங்க. ஒன்னாப்புல இருந்து அஞ்சாவது படிக்கிறது வரை ஒழுங்காவே படிச்சேன். ஆனா, ஆறாங்கிளாஸ்ல இருந்து தான் பிரச்சினையே ஆரம்பம். படிக்கிறதுன்னா என்னன்னே தெரியாத, வகுப்பறையில கவணுக்கனும்கிறதே தெரியாம வளர்ந்தவங்க நாங்க. வாத்தி பாடம் நடத்தும் போது அட்லாஸ் மேப்பை விரிச்சு ஆளுக்கு ஒரு ஊர் பேற சொல்லி அத கண்டுபிடிக்கிற வெளையாட்டு வெளையாடுவோம். ஹிஸ்டரி வாத்தியாருக்கு பயந்து 1 மாசம் ஸ்கூலுக்கு கட் அடிச்சு தண்ணி டாங்க், வித்த காமிக்கிறவன் இப்படியே ஊரையே சுத்தி கடைசியா மாட்டின பரம்பர...கட்டபொம்மு பரம்பர. பரீட்சைன்னு வந்தா மெயின் பேப்பர்கூட அடிஷனல் பேப்பர கட்டுறதுக்காவது வேனுமின்னு கஷ்டப்பட்டு 3வது பக்கத்த தொடற மாதிரி ஆன்ஸர் எழுதுவோம். நூத்துக்கு எப்படியாவது டபுள் டிஜிட்ல மார்க் வாங்க நான் பட்ட கஷ்டம் இருக்கே...உண்மையிலேயே ரொம்ப கஷ்டபட்ட காலகட்டங்க அது. உங்களுக்கு அதெல்லாம் புரியாது?

ஸ்கூல் படிக்கும் போது வெறும் காப்பி மட்டும் தான் அடிச்சோம், அதுவும் லைட்டா. அதுலயும் வயசான அந்த தமிழ் ஆசிரியை வந்துட்டா...ஆஹ்கா...அந்த சப்ஜெக்ட் பாஸ் தான். அதாவது பக்கத்து அல்லது முன் சீட்டுல இருப்பவன் பேப்பற 'பாத்து' எழுதுவது மட்டும் தான். ஏன்னா அது தான் மாட்டினா கூட ஆதாரமில்லாததுனால வார்னிங்கோட விட்டுடுவாங்க. அவ்ளோ வெவரம்? மத்த எல்லா தெகிரியமும் கல்லூரி படிக்கும் போது தான்.

அதுவும் பாத்து எழுதுவதுல ரெண்டு வகை. ஒன்னு காண்பிப்பவன் ஒத்துழைப்போடு பார்த்து எழுதுவது. இன்னொன்னு அவனுக்கு தெரியாமலேயே பார்த்து எழுதுவது. முதலாமாவது பரவாயில்லை. ஆனா அவனுக்கு தெரியாம அவன் பேப்பர பாத்து எழுதுவது இருக்கே, சில சமயம் அவன் பாட்டுக்கு அடுத்த பக்கத்துக்கு திருப்பிடுவான். அதனால கனெக்ஷன் விட்டு போயிடும். சரி பின்னால(!) பாத்துக்கலாம்னு கொஞ்சம் இடம் விட்டுடுவோம். சில சமயம் அந்த கேப் கடைசி வரைக்கும் ஃபில் ஆகாமலேயே இருக்கும்.

வெங்கி என்ற மங்கி

10-வது படிக்கும் போது என் நண்பன் வெங்கி இன்னொருத்தன் பேப்பர் வாங்கி, பிள்ளையார் சுழி மொதகொண்டு, எழுதிக்கொண்டிருந்தான். இவன் எழுதி அடுத்தவனுக்கு பாஸ் பன்னி பின் அதை இன்னொருத்தனுக்கு பாஸ் பன்னி இப்படியே பேப்பர் எங்கேயோ போயிடுச்சு. அதுவும் மெயின் பேப்பர், அடிஷனல் கூட இல்லை. கடைசி 10 நிமிஷமே பாக்கி. எல்லோரும் அவசர அவசரமா பேப்பர்களை கட்டி கொண்டிருக்க, பேப்பர் சொந்தகாரனுக்கு மட்டும் கைக்கு இன்னும் பேப்பர் வரவே இல்லை. செம டென்ஷன், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி. கடைசியில் அங்க இங்க தேடி வேறு எவனோ அவன் தன்னோட பேப்பரோட கட்டிகிட்டான், மார்க் அதிகமாகும்னு நெனச்சானோ என்னவோ? கடைசி நிமிடத்தில் கஷ்டப்பட்டு 'முடிச்சவிக்கி' ஆகி அவனை காப்பாத்தினாங்க.

இன்னொரு டீச்சர் இருப்பாரு. அவர் பேரு நியாபகம் இல்லை (பாபு?). வேதியல் வாத்தியார். அவரு மீன் மாதிரி, எப்பவும் தண்ணியிலேயே இருப்பாரு. பசங்களுக்கு மார்க் விஷயத்தில் குறையே வைக்கமாட்டாரு. அவரோட ப்ராக்டிகல் எக்ஸாம் வரும் முதல் நாளில் லேப் சாவியை வாங்கி கொண்டு சில குறிப்பிட்ட பசங்களோட லேப் நோட்ஸை மட்டும் எடுத்து லேப்பின் ஜன்னல் ஓரம் வெச்சுடுவாங்க. அவங்களும் வீட்டுக்கு போகும்போது அந்த நோட்ஸை எடுத்துக் கொண்டு என்ன எழுதனுமோ அத எழுதிட்டு மறுநாள் யாருக்கும் தெரியாம திரும்ப வெச்சிடுவானுங்க. ஒரு நாள், வழக்கம் போல நோட்ஸை வெளியில எடுத்து வைக்க, அதை வீட்டுக்கு செல்லும் போது எடுத்துக் கொள்ளும் நேரத்துக்கு நடுவுல மழை வர, நோட்டுக்கள் நனைஞ்சு போயிடுச்சு. மறுநாள், சிலரோட நோட்டுங்க மட்டும் 'நிரந்தரமாக' காணாமல் போய்விட மாட்டினவங்களுக்கு "குற்றம். நடந்தது என்ன?"-ன்னு செம டோஸு...

இதயெல்லாம் விட காலேஜ்ல தான் செம கலாட்டா...

பி.எஸ்.ஸி கணிதம் படிக்கும் போது இயற்பியல் ப்ராக்டிகல் இருக்கும். திருப்பதின்னு ஒரு புரொப்பஸர். சூப்பர் ஆளு. எல்லோரையும் மரியாதையாகத்தான் கூப்பிடுவார். அவர் க்ளாஸ்னாலே ப்ரஷ்ஷாகிடுவோம். "தம்பி குமரன். ஒன்னு கவனிச்சீங்களா? நீங்க பேசினத நான் பாத்துட்டேன். ஆனா, நான் பாத்துட்டேங்கிறத நீங்க பாக்கல" - இப்படித்தான் பேசுவார். இயற்பியல் ப்ராக்டிகலுக்கு பசங்க பிட் தயாரிப்பாங்க. ஸ்பெக்ட்ரோமீட்டர்-னு ஒன்னு இருக்கும். அதன் பயன் ஒளியை உள்வாங்கி அதை ப்ரிஸம் ஊடே பாய்ச்சி அதனை ஏழு நிறங்களாக பிரிச்சு அந்த ஒளிகளின் அளவை குறிக்க வேண்டும். ஒளி சரியாக தெரிய மேலே கருப்பு துணியை போர்த்திகொள்ள வேண்டும். அதை பயன்படுத்தி உள்ளே பிட்டை எடுத்து (அதான் உள்ளே வெளிச்சம் இருக்கிறதே) படித்து எக்ஸாம் பாஸ் பன்னிடுவாங்க. சில சமயம் மாட்டாமல் இருக்க லேப் உள்ளே வந்ததும் அருகில் இருக்கும் ஜன்னலோரம் பிட்டை பொருத்தி(!) பின் அதனை ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் ஜூம் பன்னி படிச்சுக்குவாங்க.

ஸ்பெக்ட்ரோமீட்டர் (படம் போட்டு காட்டுவோம்ல)




பெட்டிச்செய்தி

ஒரு முறை மனோகரன்னு ஒரு பையன் கருப்பு துணியை மேலே போர்த்திகொண்டு பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு சரியா 'லைன்' கிடைக்கல. சரின்னு நம்ம திருப்பதிய கூட்டி வந்து பார்க்க சொன்னான். அவர் ஏதோ எடுத்துவர சொல்ல அவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான். இவர் அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார். இந்த ஆள்மாராட்டம் நம்ம நண்பன் வெங்கிக்கு தெரியல. உள்ளே இருப்பது திருப்பதினு தெரியாம ஒரு கேள்வி கேட்டான் பாருங்க...அவரால பாவம். ஒன்னுமே பேச முடியல. வெளியே வந்து அவனை பரிதாபமாக பார்த்து அப்படியே நகர்ந்துவிட்டார். அவன் கேட்ட கேள்வி சென்சார்ட்...இப்போ நெனச்சாலும் சிரிப்பாகவும் இருக்கும்.


இன்னொரு கொடுமை. சில பாடங்கள்ல 'சரியான விடையை தேர்ந்தெடு'-ன்னு இருக்கும். அதுல காப்பி அடிக்கிறது ஈசி. ஆனா ரிஸ்க். வெறும் ஆன்ஸர் மட்டுமே சொல்லுவான். 2, 3, 2 அப்படின்னா முதல் கேள்விக்கு விடை 2வது ஆப்ஷன், இரண்டாவது கேள்விக்கு விடை 3வது ஆப்ஷன் மூன்றாவது கேள்விக்கு விடை 2வது ஆப்ஷன்...இப்படி. ஒரு முறை கெமிஸ்டரி பரீட்சையில 25 (1 மார்க்) கேள்வி வந்தது. லைனா சொல்லிகிட்டே வந்தான். நானும் என் பேப்பர்ல பென்சிலான எழுதிகிட்டே வந்தேன். நடுவுல ரெண்டு அடுத்தடுத்த கேள்விக்கும் ஒரே பதில். ஒன்றை விட்டுட்டேன் போல. அதுக்கு பின்னாடி வர்ற எல்லா கேள்வியும் தப்பாகி அந்த பரீசையில, வழக்கம் போல, பெயில் ஆகிட்டேன். இத நான் எனக்கு பின்னால வந்தவனுக்கும் இதே விடை காம்பிச்சு அவனும் பெயில் ஆகிட்டான்.

ரவி...மைக்கேல் ரவி

மைக்கேல் ரவின்னு ஒரு புரொப்பஸர். பசங்க காப்பி அடிக்கிறாங்கன்னு எப்படி தான் கண்டிபிடிக்கறார்னு தெரியாது. ரொம்ப ஸ்ட்ரிக்ட் (ஏன்னா மண்ட பார்ட்டி). எங்கிருந்தாலும் வந்து கரெக்டா கண்டுபிடிப்பாரு. ஒரு தடவ பெரிய ஹால்ல (ஆடிட்டோரியம்) பரீட்சை நடந்துச்சு. இரண்டு லைனுக்கு ஒரு புரப்பஸர். அவரு என் லைன்ல இல்ல. ஆனா பாருங்க எங்கிருந்தோ பார்த்துட்டு கரெக்டா என் லைனுக்கு வந்து என் க்ளாஸ்மேட்டை பிடிச்சார். அவன் பாவம் ஸ்கேல்ல பென்சிலால பார்முலாவ எழுதி அத பாத்து பாத்து அடிச்சிட்டு இருந்தான். எப்படித்தான் கண்டு பிடிச்சாரோ? விடைத்தாள வாங்கிட்டு அனுப்பிச்சிட்டார். பையன் ஒரு மணிநேரம் தான் எழுதியிருப்பான். ஆனா, காப்பி அடிச்சான்னு தெரிஞ்சா போதும், அவன அப்படியே அனுப்பிடுவார். அதான் அவனுக்கு தண்டனை. சண்ட முன்ன பின்ன இருந்தாலும் சவுன்டு ஜாஸ்தியா இருக்கும்.

CA-ன்னு இன்டர்னல் எக்ஸாம் வெப்பாங்க. அதுல 100 மார்க் வாங்கினால் உங்களுக்கு 10 மார்க் கிடைக்கும். 25 மதிப்பெண்களுக்கு 2 பரீச்சை. அதை யாரும் சீரியஸா எடுத்துக்காம இருந்தா அது உங்க பைனல்ல வேலைய காட்டிடும். இன்டர்னல்ல 25-க்கு 0 வாங்கினா, பைனல்ல மீதி 75-க்கு 50 எடுத்தாதான் பாஸ். அந்த பரீட்சை அவரவர் வகுப்பறையிலேயே நடக்கும். எங்கள் புத்தகங்கள் எல்லாம் எங்களுடனே இருக்கும். இது போதாதா? ஒரு CA-ல திடீர்னு அடுத்த ஸ்டெப் என்னன்னு மறந்துடுச்சு. நேரம் வேற இல்ல. சரி ஆபத்துக்கு பாவமில்லைன்னு(!) கீழே இருந்த புத்தகத்தை எடுத்து கேஷுவலா புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். கரெக்டா புரப்பஸர் பார்த்துவிட்டார். அவர் பேரு முரளி. என்ன பன்னுறதுன்னே தெரியல. டக்குன்னு புத்தகத்தை அப்படியே கீழே விட்டேன். அவர் என்ன நெனச்சாரோ. ஒன்னும் சொல்லல. ஏன்னா நாங்க முதுகலை பட்டதாரிகள் ஆச்சே! நமக்கே வெட்கமாக இருக்கட்டும்னு விட்டுட்டாரோ என்னவோ?

முதலில் பார்த்து மட்டுமே காப்பி அடித்துக்கொண்டிருந்தேன். பரினாம வளர்ச்சியா முதுகலை கணிதம் படிக்கும் பொழுது தான் பேப்பர் மாத்தி ஆடிச்சா என்னன்னு தோன்னிச்சு. எங்க கூட படிச்ச இரண்டு பொண்ணுங்க சென்னை ஸ்டெல்லா மாரீஸ்ல இருந்து வந்தவங்க. அவங்க தோஸ்த் ஆனாங்க. அவளுங்க சர்வ சாதாரணமா பேப்பர் மாத்தி எழுதுவாளுங்க. ஒரு முறை இப்படித்தான் என் பேப்பர வாங்கி எழுதிகிட்டு இருந்தாங்க. சரின்னு நானும் அவ பேப்பர வாங்கி எழுதிக்கிட்டிருந்தேன். வாங்கி எழுதிட்டு பேப்பர திருப்பி கொடுக்கும் வரை கை நடுங்கிகிட்டே இருந்துச்சு. அதுக்கு அப்புறம் பேப்பர மாத்தி எழுதறதே இல்ல. ஆனா அவளுங்க கவலையே படமாட்டாளுங்க. இப்போ அதுல ஒருத்தி, கடலோற கவிதைகள் ரேகா மாதிரி, ஒரு டீச்சர்!!!

அப்புறம் எம்.சி.ஏ சேர்ந்த பிறகு கொஞ்சம் நல்ல பிள்ளையா திருந்தியிருந்தேன் (வேற வழி?). இங்கு நடந்த கூத்துக்கள் தான் அதிகம்.

கால்குலேட்டர் 'தப்பு' கணக்கு

பெரும்பாலும் ப்ராக்டிகல் எக்ஸாமின் போது தான் அதிகமா பிட் அடிப்போம். அப்போ ஒருத்தன் புத்திசாலித்தனமா (நெனச்சு) ஒரு வேளை பன்னினான். எங்ககிட்ட கருப்பு கலர்ல ஒரு சயின்டிஃபிக் கால்குலேட்டர் இருக்கும். அதுக்கு மேல (அதே கருப்பு) கலர் பென்சிலால எழுதினா பாக்குறவங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சு பென்சிலால கஷ்டமான ஒரு ப்ரோக்ராம எழுதிகிட்டான். அவன் நல்ல நேரம் கால்குலேட்டர்ல எழுதின அதே ப்ரோக்ராம் ப்ராக்டிகல் எக்ஸாம்ல வந்தது. ஆனா அவன் கெட்ட நேரம் பாருங்க, எல்லாம் முடிக்கிற சமயம் கடைசியில மாட்டிகிட்டான். பென்சிலால எழுதினதுனால அத பக்கவாட்டுல சாய்ச்சுவெச்சு ட்யூப்லைட் வெளிச்சத்துல பார்த்தா எழுதியிருக்குறது தெரியும். அதன் படி பரீட்சையில எழுதிட்டான். கடைசி நேரத்துல பிரின்ட் அவுட் எடுக்கும் போது பிரின்டர் பக்கத்துல அந்த கால்குலேட்டர வெச்சிட்டு பிரின்ட் அவுட் எடுத்திருக்கான். அப்போ அந்த பக்கம் போன மைக்கேல் ரவி பார்த்துட்டார். அவருக்கு பளிச்ன்னு முழு ப்ரோக்ராமும் தெரியுது. அவர் பாட்டுக்கு எடுத்து 'இந்த கால்குலேட்டர் யாருது?'-னு கேட்க, தொலச்சத தேடித்தான் தர்றார்னு நெனச்சு ('மூன தொட்டது ஆம்ஸ்ட்ராங்னோவ்' மாதிரி) 'சார்! நம்ம சூசையோடது'-னு சொல்ல, எல்லோர் எதிரிலேயும் மானத்த வாங்கிட்டார். "You have really escaped from me...Sir"-னு எக்ஸ்டெர்னல் எதிரிலேயே கேட்டுட்டார். பின் அவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்கல. ஏன்னா அவர் பாலிஸி, தப்பு செய்யும் போது மாட்டினா தான் கொடுப்பாரோ என்னவோ?

'பிட்'தகோரஸ் தேற்றம்

அப்புறம் இன்னொறு பரீட்சையில். மொத்தம் 13 ப்ரோக்ராம்கள். பாடம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று நினைவு. அதுல பெரும்பாலும் கஷ்டமானது. இருந்தாலும் எல்லாவற்றையும் முடிஞ்ச அளவு புரிஞ்சு படிச்சிருந்தேன். இருந்தாலும் ஒரே ஒரு ப்ரோக்ராம் மட்டும் உதைச்சுது. என்னதான் நம்பிக்கை இருந்தாலும் ஒரு வேளை மறந்துடுச்சுன்னா என்ன பன்னுறதுன்னு அந்த ஒரு ப்ரோக்ராம மட்டும் சின்னதா பிட் எழுதி பரீட்சை ஹாலுக்கு கொண்டு போயிட்டேன். நாம தான் என்னைக்கும் உஷாரில்ல. உள்ளார போனதும் அந்த பிட்ட எடுத்து அங்கிருந்த ஒரு டெஸ்க்கில் ஒளித்து வெச்சுட்டேன். என் கஷ்ட காலம் அந்த ப்ரோக்ராமே எனக்கு வந்தது. எனக்கு நல்லா நியாபகம் இருந்தாலும் கையில் பிட் இருந்ததாலேயே மறந்து போய்விட்ட ஒரு உணர்வு. சரி! ஆனது ஆயிப்போச்சு, அஞ்சு நிமிஷம்னு நெனச்சு பிட்ட பாத்து படம் போட்டு, வழக்கம் போல கை நடுக்கத்துடன், எழுதியாச்சு. அப்போ பார்த்து சூப்பர்வைசர் (அவர் பேரு நியாபகம் இல்லை. நாங்க வெச்ச பேரு 'படையப்பா') வந்து ஒவ்வொரு பேப்பரா எடுத்து நம்பர சரி பார்த்துக்கிட்டிருந்தார். என் நேரம் அவர் என் அருகில் இருந்தவனிடம் இருந்து ஆரம்பித்தார். நான் வேற என்ன செய்றதுன்னு தெரியாம அந்த பிட்ட எடுத்து ஆன்சர் பேப்பரின் இரண்டாவது பக்கத்திலேயே வெச்சிருந்தேன். அந்த நேரத்துல வெளிய எடுக்கவும் முடியாது. அவ்வளவு தான். அடுத்து நான் தான். வந்து என் பேப்பர கையில் எடுத்தார். அவர் பேப்பரின் நுனியிலேயே பிடித்து எடுத்ததினால் நடுவில் வைக்கப்பட்ட பிட் விழுந்து விடும் அபாயம் நிறைய இருந்தது. அந்த பயம் வேறு. மாட்டினால் போட்டு கொடுக்கமாட்டார். ஆனா, பையன் நல்லா படிக்கிறவன்ற எண்ணம் இருக்கு. தெரிஞ்சா அந்த நெனப்பு காலியாயிடும். அவர் என் பேப்பர எடுத்த நேரம் வேறு எங்கோ அவர கூப்பிட அவர் அந்த பக்கம் திரும்பினார். நானும் பிட் கீழே விழுந்தால் அதை காட்ச் பிடிக்கவெல்லாம் நினைத்திருந்தேன். நல்ல வேளையாக பிட்டும் கீழே விழவில்லை. அவரும் நம்பர் செக் பன்னி அந்த பக்கம் நகர்ந்துட்டார்.

X 8086 - இது 16 'பிட்' மைக்ரோப்ராஸஸர்?

முன் குறிப்பு

இது ஆதிகால கம்ப்யூட்டரில் ஒரு வகை. இங்கே ப்ரோக்ராம் என்பது எண்களால் ஆனது. அதுவும் நாம் பேச்சுவாக்கில் உபயோகிக்கும் தசம எண்கள் அல்ல. பதின்அறும எண்கள் (Hexa decimal). உதா, 76 என்னும் பதின்அறும எண் 'Halt' என்பதை குறிக்கும். ப்ரோக்ராம் முடிக்கவைக்கும் எண் அது. இவற்றை மைக்ரோப்ராஸஸரின் மெமரியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்போம். எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட மெமரி ஆரம்ப எண் 2000. அதனால் 2000-ல் ஆரம்பித்து 2002, 2004...இப்படி எண்களை டை அடித்துக் கொண்டு போய் கடைசியில் ஏதாவது ஒரு இடத்தில் கடைசியாக '76' என்று முடியும். இதுல ஒரு விஷேசம் என்னன்னா இவை பவர் கட்டானாலோ, ஆஃப் ஆனாலோ, அதில் பதிவு செய்யப்பட்ட ப்ரோக்ராம்கள் அழிந்து விடும் (Volatile Memory).

ஆனா இவை போங்கு அடிச்சது. கரன்ட் கட் ஆனாலும் அதே நம்பருங்க தான் தெரிஞ்சுச்சு. அதை வெச்சே கொஞ்ச நாள் நாங்களும் போங்கடிச்சோம்...இருந்தாலும் அதையும் எங்க ப்ரொப்பஸர் கண்டுபிடிச்சி, ப்ராக்டிகல் ஆரம்பிக்கிற 5 நிமிஷத்துக்கு முன்னாடி வந்து (மேலே சொன்ன) 2000-ல் இருந்து பதிவு செஞ்ச நம்பர்கள அழிப்பார். இவரே இப்படின்னா, நாங்க யாரு? அழிக்கிறவரு 2000-ல இருந்து தான் அழிப்பாரு. நாங்க ஹால்ல இருந்து வெளிய போற 10 நிமிஷத்துக்கு முன்னாடி ப்ரோக்ராம அப்படியே 4000-ல் இருந்து ஆரம்பிச்சு அடிச்சிட்டு போய்டுவோம். முன்னாடியே பேசி வெச்சிடுவோம். அதனால அடுத்து வர்றவன் மொத வேலையா 4000-ல இருந்து 76 வர்ற வரைக்கும் எல்லாத்தையும் எழுதி வெச்சி வந்துடுவான். இப்படியே 'தகவல் அறியும் சட்டம்' மூலமா எங்க பொழப்பு ஓடிச்சு.

வாத்திக்கே பாடம் சொன்ன சீனு

ஒரு முறை CA பரீட்சையில் எனக்கு முன் சீட்டிலிருந்தவன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து எழுதி கொண்டிருந்தான். நான் கேசுவலா பேப்பர பப்பரப்பான்னு பரப்பி வெச்சு எழுதிக்கிட்டிருந்தேன். அப்போ சூப்பர்வைசர் ரஃப்பேல்னு ஒரு புரொப்பஸர். அங்கே நாங்க ரெண்டு பேரும் இருந்த சூழ்நிலைல அவன் என் பேப்பர பாத்து எழுதிக்கிட்டிருந்த மாதிரி இருந்தது. யாரா இருந்தாலும் அப்படித்தான் தோனும். சட்டுனு என் பேப்பர எடுத்து அதுல மேல 5 மார்க் மைனஸுன்னு போட்டுட்டார். அதனால பைனல் எக்ஸாம்ல எனக்கு 100-கு .5 மார்க் அவுட். இது என்னடா வம்பாபோச்சுன்னு அவர் கிட்ட வாதாடி பார்த்தோம். அவர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். 'நீ காண்பிச்சேன்னு ஒத்துக்கோ. 5 மார்க் கொடுத்துடறேன்'-ன்னார். நாம தான் சொரணை உள்ளவங்க ஆச்சே. காஃப்பி அடிக்கும் போதோ, இல்ல காண்பிக்கும் போதோ மாட்டியிருந்தா பரவாயில்ல. செவனேன்னு உக்கார்ந்திருந்த நம்மள பார்த்து இப்படி சொல்லிட்டாரேன்னு கடைசி வரைக்கும் ஒத்துக்கலையே. 5 மார்க் போயாச்சு. நாங்கள்ளாம் கௌரவம் படத்துல வர்ற பாரிஸ்டர் ரஜினிகாந்த் மாதிரி. அக்காங்.

இதுக்கே இப்படீன்னா...வாத்திங்க அடிச்ச பிட்கள்...

என் நண்பன் வெங்கி காலேஜ்ல இப்படித்தான் அவன் பக்கத்துல உக்காந்த பொண்ணு ஒன்னு பைனல் ப்ராக்டிக்கல்ல ஒன்னுமே பன்னாம உக்காந்திருந்துச்சு. இவன் என்னடா இது சும்மா உக்காந்திருக்குதேன்னு அவன் மானிட்டர அவ பக்கம் திருப்பி வெச்சு 'பார்த்து டைப் அடிச்சுக்கும்மா?'ன்னு விட்டான். ஆனா, அவ அதையும் செய்யல. சரின்னு விட்டுட்டான். கடைசி 10 நிமிஷம் இருக்கும் போது அவரவர் செஞ்சு எடுத்த ரிசல்ட்ட பிரின்ட் அவுட் எடுத்து ஆன்ஸர் பேப்பர்ரோட கட்டனும். இவன் பிரின்ட் அவுட் எடுக்க பிரின்டர் பக்கத்துல இருந்த ப்ரொப்பஸர் ஒருத்தர் இவனோட பிரின்ட் அவுட்ட எடுத்து நேரே அந்த பொண்ணுகிட்ட கொடுத்து இவன்கிட்ட 'வேற எடுத்துக்க'-னு சைகையிலேயே சொன்னார், அந்த பிரின்ட் அவுட்ல அந்த பையனோட ரிஜிஸ்ரேஷன் நம்பர் இருக்குறது கூட தெரியாம. 'சார்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுல என் ரிஜிஸ்டர் நம்பரையும் சேத்த்த்த்த்த்த்த்த்த்து தான் பிரின்ட் கொடுத்திருக்கேன்'-னு லொள்ளு சபா மனோகர் ஸ்டைல்ல சொல்லி, அப்புறம் அவன் ரிஜிஸ்ட்டர் நம்பர எடுத்துட்டு அந்த பொண்ணோட ரிஜிஸ்ரேஷன் நம்பர் போட்டு இன்னொரு பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்தான். அந்த பொண்ணு அந்த பிரின்ட் அவுட்ட எடுத்து அவ பேப்பர்ல கட்டி கொடுத்து நல்ல மார்க் வாங்கிடுச்சு.

இதுதாங்க Master Bit

இதுவும் அதே காலேஜ்ல தான். அக்கவுன்ட்ஸ் பேப்பர் செம்ம கஷ்டமா வந்துச்சு. எல்லோரும் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாங்க. அப்போ பிரின்ஸிபால் உள்ளார வந்தார். அவர் வந்ததும் அங்கிருந்த சூப்பர்வைசர் கொஞ்ச நேரம் வெளியே போனார். அவர் எப்பவாவது வந்து ஒரு அரை மணிநேரம் சூப்பர்வைசரா இருப்பார். வந்து பேப்பர் எப்படி இருக்குன்னு விசாரிச்சார். 10 நிமிஷம் கழிச்சு அக்கவுன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் எச்.ஓ.டி வந்தார். 'எல்லோரும் எழுதிக்குங்க' அப்படீன்னு இரண்டு 10 மார்க் கேள்விக்கு பதில வாசிச்சார். ஆஹா இதென்ன அற்புதம் அப்படீன்னு நெனச்சு பசங்க (புள்ளைங்க எல்லாம் சேர்த்து) புளங்காகிதம் அடஞ்சுட்டாங்க. ஆனா பாருங்க, அந்த 2 விடைகள்ல ஒன்னுல சின்ன கூட்டல் / கழித்தல் தப்போட தான் வாசிச்சார். பசங்க தெளிவா இருந்தாங்கன்னா அதையும் கரெக்ட் செஞ்சு 10-க்கு 10 வாங்கலாம். நிறைய பேர் அத நோட் பன்னல. அப்புறம் நாங்களே குசு குசுன்னு பேசி சரி செஞ்சுட்டோம். அப்ப கூட அந்த சம்ஜெக்ட்ல 30% பேர் தான் பாஸ் அவுட். அவ்வளவு கஷ்டம் அந்த பேப்பர்.

இது எப்படி இருக்கு?

Wednesday, April 16, 2008

பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் - சைக்கான்கள்


போ..........ன பதிவில் உடலின் இயக்கங்களுக்கு பக்'கா' பலமாக இருக்கும் நியூரான்களை பற்றி பார்த்தோம். இப்போ சைக்கான்கள். சைக்கான்கள் பற்றி பொதுவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் தான் இந்த தாமதம்.

உங்களை யாராவது தொட்டால் உங்கள் மூளைக்கு, இருப்பை பொருத்து, 'உன்னை யாரோ தொடுறாங்க' என்று மூளைக்கு சிறு சிறு மின்சார அதிர்வுகள் மூலம் சமிக்சை கொடுப்பது இந்த நியூரான்களின் வேலை.

உடம்புக்கு நியூரான்கள். சரி! மனதுக்கு? இருக்கவே இருக்கிறது, இளிச்சவாய 'சைக்கான்'கள், கண்ணுக்கு புலப்படாத சைக்கான்கள். சைக்கான்கள் என்பவை "Mental units".

பொதுவான ஒரு விளக்கம், உதா, நாம் ஒரு கைவிளக்கை (டார்ச்)‍ஐ உபயோக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதிலிருந்து ஒளிக்கற்றை வெளியேரும். ஆனால் அந்த கைவிளக்கில் ஒளி இல்லை. துப்பாக்கியின் விசையை அழுத்தும் பொழுது, அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவருகிறது. ஆனால், அது போல அல்ல கைவிளக்கில். ஒளிக்கற்றை அந்த கைவிளக்கில் "இருக்கு. ஆனா இல்லை", "வரும். ஆனா வராது" போலத்தான். Potential என்று சொல்லப்படுவ‌தை போல. இதைப்போன்ற கண்ணால் கான முடியாத "Mental units" தான் சைக்கான்கள்.

இந்த சைக்கான்கள், முன்பே பார்த்த நியூரான்களின் டென்ட்ரைட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒவ்வொறு டென்ட்ரைட்களும் ஒவ்வொரு சைக்கான்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உடம்பின் உணர்ச்சி பகுதிகள் நியூரான்களால் ஆனது போல மனதின் அல்லது ஆன்மாவின் அணுக்கள் தாம் சைக்கான்கள். அதாவது, சைக்கான்கள் ஒன்று சேர்ந்து ஆன்மாவை உருவாக்குகின்றன. இவைகள் அடிப்படை அணுக்கள். அடிப்படை என்றால்? நாமெல்லாம் (நன் ஆன்மாக்கள்) சில பில்லியன் வருடங்களுக்கு முந்தைய சைக்கான்கள். அணுக்கள், செல்கள், நியூரான்கள், விலங்குகள், குரங்குகள் மற்றும் நம் மூதாதையர்கள் ஆகியோறின் செயல்பாடுகளுக்கு இந்த (நம்முடைய) சைக்கான்களே காரணம்! இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள ஆன்மாக்களே இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அளவு: 700 கோடி-க்கும் குறைவாக!!

சைக்கான்களின் பொதுவான குணங்கள்:

சைக்கான்களுக்கு மரணம் இல்லை. நாம் இறந்தவுடன் நம்முடைய நினைவுகள் எங்கும் போவதில்லை. ஒரு மனிதன் பிறப்பதற்கு ஒரு ஆன்மா தேவை. அந்த ஆன்மாவானது மறு அவதாரம் மூலமாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும். சைக்கான்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியின் பொழுது தங்கள் பொதுவான அடையாளத்தை தொலைக்காது. இது சைக்கான்களின் குணம். இறப்பு என்பது பிறப்பிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் மிகத் தேவையானதாக இருக்கின்றது.

நமக்கு, நம் மூளைக்கு தெரிந்த செய்திகள் கணக்கிலடங்கா. நினைத்து பாருங்கள். பலவருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றையெல்லாம் நம் மூளை நியாபகம் வைத்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பார்த்த நண்பனை மறுபடியும் பார்த்தால் உடனே பழைய நியாபகங்கள் நம்மையும் அறியாமல் நம் மூளை தன்னுடைய‌ hard disk-ல் இருந்து எடுத்து வருகிறது. உடனே நம் மனதில் பலப்பல எண்ணங்கள் ஓடுகிறது. அவனால் பெற்ற நன்மைகள், அவனுடன் ஏற்பட்ட சண்டைகள், சமாதானங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், இப்படி பலப்பல. இவையாவும் ஒலியை விட, மின்னலை விட, ஒளியை விட அதிக வேகத்தில் நமக்கு கிடைக்கிறது, சட்டென்று. இவை யாவற்றையும் எங்கு சேமித்து வைக்கிறது? எவ்வாறு சேமித்து வைக்கிறது? எப்படி அவை நியாபகத்திற்கு கொண்டு வரப்படுகிறது? அவ்வளவும் சுமார் 1.3 - 1.4 கிலோ எடையுள்ள திசுக்களால் ஆன 'மூளை' என்னும் பெயருடன் அழைக்கப்படும் ஒரு பொருளில்! (இவையெல்லாம் ஏன் மூளையில் சேமிப்பதாக சொல்லுகிறோம். காரணம், இவையெல்லாம் நம் மரபணுவில் அல்ல என்று சொல்லத்தான். மரபணுக்களால் கொஞ்சம் போல, ஆனால் சக்தி வாய்ந்த, தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, கணினியின் BIOS battery போல.).

ஆன்மாவிற்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. உதா, நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நம் மூளையின் சில பகுதி துடிப்புடன் இருக்கும். இந்த இடங்களிளெல்லாம் நம் ஆன்மா துடிப்புடன் இருக்கிறதாக அர்த்தம். அதை போலவே நம் மற்ற உடல் சார்ந்த இயக்கங்களும். இவைகளை தற்போது உள்ள விஞ்ஞான சாதனங்களின் உதவியுடனேயே அறிந்துகொள்ளலாம். நாம் மனதில் நினைக்கும் எண்ணங்கள் உடல் சார்ந்த, உணரக்கூடிய சக்தியை கொடுக்கும் என்பது தெரிகிறது. எண்ணங்களுக்கும் உடல் ரீதியான‌ சக்தி உண்டு.

ஆக, நம் ஆன்மா என்னும் மனம் சம்பந்தப்பட்டவையும், மின் அதிர்வுகள் என்னும் உடல் அல்லது உணர்ச்சி சார்ந்தவையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளவை.

அடுத்து, ஆன்மாவும் சைக்கானும் ஒன்றை ஒன்று ஒத்துப்போகக்கூடியவை. இம்மானுவேல் கன்ட் என்னும் ஜெர்மானிய தத்துவ மேதையின் கூற்றுப்படி, சைக்கன்கள் என்னும் mental unit-கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் துடிப்புடன் இருக்கும். எப்படி?

இப்படி. இந்த பிரபஞ்சத்தின் வெற்றிடங்களில், இன்ன பிற துகள்களின் நடவடிக்கைகள் ஆன்மாக்களின் நடவடிக்கைகளுடன் ஒத்துப் போக‌வேண்டும் என்ற கட்டாயம் தேவை இல்லை. மற்ற துகள்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். கண்ணால் காணக்கூடிய எந்த பொருளும். தூசு அல்லது எரி கற்களோ அல்லது கோள் போன்றவை. மற்ற துகள்களின் நடவடிக்கைகள் போலவே ஆன்மாக்களின் துகள்களும், நம் சைக்கான்கள், இருக்காது அல்லது நடக்காது. காரணம், மற்ற துகள்களைப் போலவே ஆன்மாக்களையும் நடவடிக்கைகளால் அதன் இருப்பிடத்தை அறியலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. முன்பே சொன்னது போல நடவடிக்கை அற்ற ஆன்மாகளின் இருப்பிடத்தை அறிய முடியாது அல்லவா?

ஆன்மாக்கள் சைக்கான் என்னும் அணுக்களால் ஆனவை. ஆன்மாக்களில் தான் புத்திக்கூர்மை இருக்கின்றது, மூளையில் அல்ல. புத்திக்கூர்மை அடைய முக்கிய காரணம், ஒரு உயிரினத்தின் கைகள். ஆமாம். கைகள் சுதந்திரமானால் தான் யோசிக்க முடியும். நாம் பிறந்த பின் நாம் நம் மனதுக்குள் கேள்விகள் எழும் தருனம் எது என்றால் நாம் நம் கைகளை உபயோகிக்க ஆரம்பித்த பின் தான். கவனித்துப் பாருங்கள். குழந்தை தவழ்ந்து சென்று அமர்ந்து தன் கைகளில் உள்ள தூசுக்களை பார்க்கும். அது தன் கைகளின் உபயோகத்தை பயன்படுத்திக்கொள்ள / புரிந்து கொள்ள‌ ஆரம்பிக்கிறது. மீன்களில் டால்பின்களைவிட எட்டு கைகள் கொண்ட ஆக்டோபஸ் மீன்கள் தாம் புத்திக்கூர்மை அதிகம் உடையவை!

மூளை சம்பந்தப்பட்ட விபத்துக்களின் நினைவுகளை இழந்தவர்கள் தனக்கு தெரியாதவற்றை கற்றுக்கொள்வதை விட, கூடிய சீக்கிரம் தாங்கள் மறந்தவற்றை கற்றுக்கொள்கிறார்கள். அதை போலவே, நாம் நம் முற்பிறவியின் நினைவுகளை நாம் சட்டென்று கற்றுக்கொள்ளலாம் (முற்பிறவி/மறுபிறவி இருப்பதாக வைத்துக்கொண்டால், இந்த சைக்கான் தத்துவம் படி).

ஆன்மாக்களை இயற்பியல் சொல்லும் சக்தி (எனர்ஜி)யுடம் ஒப்பிடலாம். எனர்ஜி என்பதை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஆனால் அதனை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மற்றலாம், ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு உருமாற்றம் செய்யலாம், கூடு விட்டு கூடு பாய்வது மாதிரி. உதா, ஒரு யந்திரம் (மோட்டார்) சுற்றுவதாக வைத்துக் கொள்ளலாம். யந்திரம் சுற்ற சுற்ற அதில் இருந்து வெப்பம் வெளிப்படுகிறது. இங்கு இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று யந்திரம் என்னும் சக்தி, மற்றொன்று வெப்பம் என்னும் சக்தி. ஒன்றில் இருந்து மற்றொன்று உருவாகின்றது. இரண்டும் இந்த பிரபஞ்சத்தில் தான் இருந்தது. ஒன்று கரைய கரைய மற்றொன்று உருவாகின்றது. அதே போல ஆன்மாக்களுக்கும் அழிவில்லை. அவை இந்த பிரபஞ்சத்தில் தாம் இருக்கும். எங்கும் ஓடிவிடாது.

மற்றொரு சுவையான தகவல். ஒரு வகையில், இந்த உலகில் நாமெல்லாம் மேட்ரிக்ஸ் படத்தில் சொல்லப்படும் பேட்டரி போலத்தான். இந்த உலகின் மக்கள் தொகை ஒரு சம நிலையில் தான் இருக்குமாம். அதாவது இந்த உலகம் இயங்கக்கூடிய அளவில். மக்கள் தொகை அதிகமாக அதிகமாக ஏதாவது ஒரு பேரழிவோ அல்லது ஏதாவது ஒரு வகையில் (உதா, ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமாவது) போன்ற வழிகளில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது உண்டு. அதேபோல, திடீரென்று மக்கள் தொகை கணிசமாக குறையும் பொழுது அதனை சமம் செய்ய மற்ற வழிகளில் மக்கள் தொகை அதிகரிக்க செய்யப்படும். உதா, இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகில் மக்கள் தொகை அதிகரித்ததை சொல்லலாம். இதற்கு காரணம், போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வெளிவர என்று கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாதிடலாம். மேலும் 9/11 தாக்குதலுக்கு பிறகு சரியாக பத்து மாதங்கள் கழித்து அமெரிக்காவில் பிரசவங்கள் வழக்கதை விட அதிகமாக நடந்ததையும் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுவதை போலத்தான்.

மனிதர்களுக்கு மட்டும் தான் இது பொதுவானதா என்றால் மனிதனே ஒரு social animal தானே! அதலால் மிருகங்களுக்கும் இது பொருந்தும் தானே! அமெரிக்காவில் இயந்திரங்களில் பயன்பாடு அதிகரித்த காரணத்தினால், காட்டுக் குதிரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது, கடந்த 10 - 20 வருடங்களாக. காரணம், காட்டுக் குதிரைகள் பழக்கப்பட்டு வீட்டுக் குதிரைகளாக உபயோகப்படுத்தப்பட்டன. இயந்திரங்களின் வரவால் அவைகளின் பயன்பாடு குறைந்தது.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது? நியூரான்கள், சைக்கான்கள், மூளை, ஆன்மா ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.

மனம் சம்பந்தப்பட்டது தான் சைக்கான்கள். சரி! அப்படியென்றால் ஆன்மாவிற்கும் சைக்கானுக்கும் என்ன சம்பந்தம்?


பின் குறிப்பு: மறுமொழி மட்டுறுத்தலின் சோதனைக்காக இது ஒரு மீள்பதிவு.