Thursday, July 23, 2009

கொள்ளையடிப்பது ஒரு கலை...

இந்த வருட கோட்டாவாக என் தந்தையிடம் இந்த வித்தையை காட்டிய காவல் துறையினருக்கு என் வீர வணக்கங்கள். அதனால் இந்த மீள் பதிவு...

எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.

ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் 'கார்டன் சிட்டி' பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.

"நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)"-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. 'சிறிய' என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், 'ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?"-ன்னு. "அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க"-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!

நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, "சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?"-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். 'எப்படியும்' திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.

(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா "வணக்கம் பாய்"-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு "இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?". அது ஒரு தனி கூத்து...)

மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.

ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு 'உக்காந்து யோசிச்சு' இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்...16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி...