Wednesday, December 23, 2009

தி டைம் மெஷின் (2002)

ஏற்கனவே இந்த திரைப்படத்தை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், அப்பொழுது கதை புரியாமல் பார்த்தது. பின் சமீபத்தில் சப்-டைட்டிலுடன் பார்த்த போது தான், அந்த படத்தில் சொல்லப்படுவது என்னவென்று ஓரளவு புரிந்தது.



'முதலில்' அந்த பதிவில் இருந்து 'கொஞ்சம்':

காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, முன்பிருந்த நிலையில் (past) பூமிக்கு திரும்ப முடியுமா? இப்படி பல கேள்விகள் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது. ஒருவனால் சுலபமாக காலத்தை நோக்கி பயனிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? General Theory of Relativity-ன் படி, உலகில் ஒளியை விட வேகமாக பயனிக்கும் பொருள் கிடையாது. ஆனால், அந்த வேகமே பத்தாமல் போனால்? ஒரு உதாரணம், ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். ஒரு பொருளை நாம் பார்ப்பது, அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஒரு பொருள் சிகப்பாகத் தோன்றுகிறது என்றால், அந்தப் பொருள் அனைத்து வண்ணங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு, வெறும் சிகப்பு வண்ணத்தை மட்டுமே வெளியிடுகிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள். அது அங்கிருப்பது, அந்த நட்சத்திரம் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஆனால் அந்த ஒளி உங்களை வந்து சேர பல ஒளி ஆண்டுகள் ஆகும். அதனால், நீங்கள் பார்ப்பது எதுவும் அங்கு இல்லாமல் கூட இருக்கலாம். அந்த நட்சத்திரம் நகர்ந்து போய் இருக்கலாம். காரணம், இந்த உலகம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதனால், நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலங்கள் தாம் (எல்லாம் மாயா). இது மட்டும் அல்ல, நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும்.

அதனால், ஒருவர் ஒளியை விட வேகமாக பயனிப்பவராக இருப்பாராயின்(??), General Theory of Relativity-ன் படி அவரால், காலத்தில் பின்னோக்கியும் பயனிக்க முடியும்.
The Time Machine (2002)

படத்தில் நம் நாயகன் அலெக்ஸான்டர் (Guy Pearce) ஒரு விஞ்ஞானி. காதலுக்கு நடுவில் அவ்வப்போது ஆராய்ச்சியில் இறங்குகிறார். ஒரு முறை காதலியுடன் ஒரு மாலை வேளையில் ஒரு பூங்காவில் இருக்கும் போது, இவர்களிடம் வழிப்பறிக்காக வந்த ஒரு திருடன் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட, அது வெடித்து காதலி மரணமடைகின்றார்.



இதில் இருந்து மீள முடியாமல், 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, காலத்தை நோக்கி பயனப்படும் ஒரு கலனை கண்டுபிடிக்கிறார். அதில் ஏறி 4 ஆண்டுகள் பின்னோக்கி சென்று, அதே பூங்காவிற்கு சென்று, முன்பு சென்ற நேரத்தை விட கொஞ்சம் முன் சென்று, காதலியை வேறு இடத்திற்கு அழைத்து செல்கிறார். அவளை காப்பாற்றிவிட்டதாக நினைக்கிறார். காதலிக்காக ரோஜாப்பூ வாங்க சாலையை கடந்து செல்லும் போது, காதலி தெருவில் செல்லும் ஒரு குதிரை வண்டி மேலே விழுந்து இறந்து போகிறார்.

ஆக, எத்தனை முறை திரும்ப சென்றாலும் விதியை மாற்ற முடியாது என்று அறிகிறான். ஏன் இறந்த காலத்தை மாற்ற முடிவதில்லை என்ற கேள்வி எழுகிறது? அந்த கேள்விக்கான விடையை அறிய காலத்தின் முன் நோக்கி பயனிக்கிறான். ஆண்டு கி.பி. 2030-க்கு செல்லும் பொழுது இவனின் கேள்வி சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரத்தை திரையில் பார்க்க, அங்கே இறங்கி ஒரு நூலகம் செல்கிறான். வேறு இடமெல்லாம் இல்லை. அவன் முன்பிருந்த இடமே இப்போது நூலகமாக மாறி இருக்கிறது. அங்கு கண்ணாடியில் பின்னால் மட்டும் இருக்கும் செயற்கை மனித பிம்பமான (Holographic AI Librarian) வாக்ஸ் 114-ஐ கேட்க, அது இன்னும் விடை கிடைக்கவில்லை என்று சொல்கிறது.

கி.பி. 2037-க்கு செல்லும் பொழுது அங்கே நிலவு வெடித்து சிதறுவதால் பூமி அழிவதை பார்க்கிறான். அந்த இடிபாடுகளில் இருந்து தப்பிக்க கலனில் ஏறும் போது, அடிபட்டு சுயநினைவை இழக்கிறான். நினைவு திரும்பும் போது அவன் பயனம் செய்யும் ஆண்டு கி.பி. 802,701.



அவனை மருத்துவம் பார்த்து காப்பாற்றுவது (மேலே இருக்கும் ;)) மாரா என்ற பெண். மனிதன் மறுபடியும் ஆரம்ப கால வாழ்க்கையில் இருப்பதை பார்க்கிறான். அங்கே இரு விதமான மனிதர்கள். குரங்குகள் போன்ற முக அமைப்பும் சுமார் 12 அடி உயர மெகா வேட்டையாடுபவர்கள் (Morlocks) மற்றும் வேட்டையாடப்படுபவர்கள் (Eloi). அவர்களால் மனிதர்களின் கனவுக்குள் ஊடுருவ முடியும். அப்படி ஊடுருவி அவர்களை பயமுறுத்துகிறார்கள் மார்லாக்ஸ். தினம் தினம் உணவுக்காக மனிதர்களை வேட்டையாடுகிறார்கள் மார்லாக்ஸ். ஒரு நாளைய வேட்டையில் மாராவை தூக்கி சென்று விடுகிறார்கள்.

அலெக்ஸ் அங்கே அந்த வோக்ஸ் 114 இன்னும் 'உயிருடன்' உள்ளதை கண்டுபிடித்து, மாராவை காப்பாற்ற, மார்லாக்ஸ் குகை அடைய வழி கேட்டுக் கொள்கிறான். வழி அறிந்து, உள்ளே செல்லும் அலெக்ஸ் அவர்களிடம் மட்டிக்கொள்கிறான். அங்கே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மாராவையும், அங்கே அந்த மார்லாக்ஸின் தலைவனையும் பார்க்கிறான். அவன், மனிதனை போல் இருக்கும், புத்திசாலியான Über-Morlock. நிலவு உடைந்த பொழுது பூமியின் அடியில் தங்கி பிழைத்து வாழ்ந்தவர்கள் இந்த வேட்டையாடுபவர்கள். பூமியின் பேற்பரப்பிலேயே வாழ்ந்து பிழைத்து வந்தவர்கள் சாதாரன மனிதர்கள் (Eloi) என்று புரிய வைக்கிறான் அந்த தலைவன். அவனுடைய கலனையும் அங்கே கொண்டு வந்து விடுகிறார்கள் மார்லாக்ஸ்கள்.

அங்கே அலெக்ஸின் கேள்விக்கு அந்த தலைவன் மூலம் விடை கிடைக்கிறது. அவன் காதலி இறந்ததால் தான் அந்த கலனை அவனால் கண்டுபிடிக்க முடிகிறது. ஒரு வேளை இறக்கவில்லை என்றால் அந்த கலனை கண்டுபிடித்திருக்க மாட்டான். இவை இரண்டும் Mutually Exclusive (டாஸ் போடும் போது பூ/தலை, ஏதாவது ஒன்று மட்டும், மட்டுமே விழுவதை போல). அதனால் அந்த கலன் இருப்பதால், அவன் காதலி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று புரிய வைக்கிறான். அலெக்ஸுக்கு இப்பொழுது அவன் காதலி கிடைக்க வாய்ப்பில்லை என்று உணருகிறான்.

அலெக்ஸான்டர் திரும்ப அவன் காலத்திற்கு செல்ல கலன் ஏறுகிறான். அந்த கலன் கிளம்பும் போது அந்தன் தலைவனை உள்ளே இழுத்துக் கொள்கிறான் அலெக்ஸ். அந்த கலன் காலத்தின் முன்னே நோக்கி பயனிக்கும் போது உள்ளே அவர்கள் இருவரும் சண்டை போடுகிறார்கள். ஒரு (கால) கட்டத்தில் அந்த கலனில் இருந்து வெளியே தள்ளுகிறான் அந்த ஊபெர் மார்லாக்கை. அதாவது, எதிர்காலத்திற்கு சென்று அவனை வெளியே தள்ளிவிடுவதால், அவன் இறக்கிறான்.



கலனை நிறுத்தும் போது வருடம் 635,427,810. அந்த காலகட்டத்தில் அவர்கள் இருந்த குகை எல்லாம் அழிந்துவிடுவதை பார்க்கிறான். பின் திரும்ப அந்த குகைக்கே வந்து அந்த கலனை இயக்கி, கியரை செயலிழக்க வைக்கிறான். அது பயங்கரமான Time distortion-ஐ உருவாக்குகிறது. அதன் விளைவாக அந்த இடம் வெடித்து சிதறி பாதாள உலகம் அழிகிறது. அலெக்ஸ் அங்கேயே தங்கிவிடுகிறான்.

மறுபடியும் அந்த பதிவில் இருந்து:


இந்த படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள்

1) கதாநாயகன், ஒரு காட்சியில், கால இயந்திரத்தின் ஃபார்முலாவை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி க்லோஸ் அப்-ல் காட்டப்படும். மெள்ள காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், திரையில் ஒரு ஏனி தெரியும். அதாவது, கதாநாயகன் ஒரு ஏனியின் மேல் நின்று ஃபார்முலாவை எழுதிக் கொண்டிருப்பான். காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், அந்த அறை முழுக்க கரும்பலகையாக இருக்க, ஒரு ஏனியில் நின்றுக்கொண்டு அந்த ஃபார்முலாவின் continuation-ஐ எழுதிக்கொண்டிருப்பான்.

2) கால இயந்திரத்தில் அமர்ந்து அதை இயக்க ஆரம்பிக்க, அந்த அறையில் இருக்கும் (பல) கடிகாரங்கள் ஒரு கணம் நின்று, பின் பின்னோக்கி ஓட ஆரம்பிக்கும். அந்தக் காட்சி பார்க்கும் பொழுது ச்சும்மா 'நச்'னு இருக்கும்.

3) அந்தப் படத்தின் கடைசி காட்சியில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று நிகழ்காலம், மற்றொன்று எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு. இரண்டும் ஒரே நேரத்தில் synchronised-ஆக வரும். இரண்டும் ஒரே இடத்தைக் காட்டுகிறது. முதல் பாதியில், கதாநயகனின் பாட்டி காவலரிடம், தன் பேரன் அந்த அறையில் தான் கடைசியாக இருந்ததாகவும், பின் காணாமல் போய்விட்டதாகவும் கூறுவாள். மற்றொரு பாதியில் (அதே இடத்தில், எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு) கதாநாயகன், அதுதான் தன் அறை என்றும், அதன் தொடர்பான காட்சியை விளக்கிக்கொண்டிருப்பான்.

4) தற்காலத்தில் இருந்து 50 வருடம் கழித்து பயனிக்கும் இடத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஒரு கண்ணாடியும் அதில் ஒரு உருவமும் தெரியும். அது ஒரு Virtual reality உருவம்.
அதனால், ஒரு வேளை யாராவது ஒரு முன்பின் பழக்கமில்லாதவர் வந்து உங்கள் வீட்டின் கதவை தட்டினால், திறக்க மறக்காதீர்கள். காரணம், அவர் உங்களுடைய 1000 தலைமுறைக்கு பிந்தைய உங்களின் பேரனோ/பேத்தியாகவோ டைம் மெஷினில் உங்களை பார்க்க வந்திருக்கலாம்... ;)

Sunday, December 20, 2009

அ வ தா ர் (A V A T A R) - நம்ம மக்களுக்கான ஒரு படம்

அ வ தா ர் (A V A T A R) - நம்ம மக்களுக்கான ஒரு படம்

டைட்டானிக் படத்தின் இயக்குநரின் அடுத்த படம், சுமார் 11 வருடங்கள் இடைவெளி கழித்து.



கதை சுருக்கம்:

கி.பி.2154-ல் கதை நடக்கிறது. சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் பண்டோரா என்ற கிரகத்திற்கு பூமியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள் மனிதர்கள் (Morons). ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு சுமார் 2,99,792 கி.மீ. அதன்படி, ஒளி ஒரு ஆண்டு பயனிக்கும் தூரம், ஒரு ஒளி ஆண்டு. அங்கு உயிர் வாழ, ஆக்ஸிஜன் முகமுடி வேண்டும். இல்லை ஆள் காலி. இவர்கள் அனைவரும் பூமியில் ராணுவத்தில் இருந்தவர்களும் விஞ்ஞானிகளும். சில வருடங்கள் பயணத்திற்கு பிறகு பண்டோராவை அடைகிறார்கள். அங்கு அவர்களுக்கான வேலை, அங்கிருக்கும் இயற்கை கணிமங்கள் (Unobtanium). அவைகளை பூமிக்கு கொண்டு வருவது. அந்த கிரகத்தில் பூமியை போன்றே பல மிருகங்களும் உள்ளவை. 6 கால் குதிரைகள். ஹிப்பபொட்டாமஸ் போன்ற மெகா சைஸ் ஹிப்பபொட்டாமஸ்கள். பெரிய சைஸ் கழுகுகள் போன்ற பறவைகள் போன்றவை.

பூமியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே இறங்கும் மனிதர்கள் அவர்களிடம் உறவாட ஏதுவாக உருவாக்கும், அவர்களை போன்ற உடல்கள் தான் "அவதார்"கள். அவை வெறும் உடம்புகள். ஒரு மெஷினில் படுத்து தூங்க வைத்து கனவு மூலமாக (dream walkers) அங்குள்ள அவதார்கள் இயக்கப்படுகின்றன. கூடு விட்டு கூடு பாய்வது போல. இங்கே தூங்கினால் அங்கே உயிர் பெரும் அந்த அவதார். நம்முடைய கதாநாயகன் ஜேக் (Jake Sully), போரினால் முதுகுத்தண்டு பாதிப்படைந்த, சக்கர நாற்காலியில் பயனிக்கும் ஊணமுற்றவர். அவர் twin அண்ணன் விஞ்ஞானியாக இருந்து இறந்ததால், அவருடைய அவதார் வீனாக போகாமல் இருக்க இவரை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அங்கே செல்லும் ஜேக் அந்த அவதார்களிடம் சேர்ந்து, அவர்களின் வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு, அவர்களின் நம்பிக்கையை பெற்று அந்த அவதார்களை அந்த கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் ('வியட்நாம் காலனி' படம் போல). அந்த கிராமம் என்பது ஒரு மெகா சைஸ் மரம். அந்த மரத்திற்கு அடியில் தான் மனிதர்களுக்கு தேவையான அந்த கணிமங்கள் இருக்கிறது.



முதலில் உளவு பார்க்க செல்லும் ஜேக், அவர்களின் வாழ்க்கை முறையில் ஈர்க்கப்பட்டு அவர்களுடனேயே சேர்ந்து கொள்கிறார். ஆனால், அவரின் உண்மையான உடல் மனிதர்களின் இருப்பிடத்தில். அதனால், ராணுவம் தலையிட்டு அவரை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகின்றனர். அங்கே இருக்கும் இன்னும் சில மனிதர்களின் துணையோடு அங்கிருந்து தப்பித்து, அந்த மெஷின்களையும் கொண்டு போய் அந்த அவதார்களுக்காக போரிடுகின்றனர். யார் வென்றார்கள்(!), எப்படி வென்றார்கள் என்பதை... வெண்திரையில் காண்க.

சரி! படம் எப்படி?

இந்த படம் 2-டி மற்றும் 3-டி ஆகிய வடிவங்களில் வெளிவந்துள்ளது. நான் பார்த்தது 2-டி. கண்டிப்பாக 3-டியில் பார்த்துவிட வேண்டும்.

எனக்கு இமெயிலில் பல முறை வால் பேப்பர்கள் வந்துள்ளன. அந்த வால் பேப்பர்களில் பல புதிய வண்ண கலவையுடன் இமெஜினரி கிரகங்கள் (photo-realistic world) போன்ற படங்கள் வந்துள்ளன. அதை நிஜமாகவே திரையில் கொண்டுவந்துள்ளது சிலிர்ப்பூட்டுபவை. படத்தின் உண்மையான ஹீரோ, கிராபிக்ஸ். அந்த தூர தேச...ம்ஹூம்...தூர கிரகம் அத்தனை அழகு. செயற்கை அழகு தான் என்றாலும், அம்புலிமாமா படித்தவர்களும், பொ.செ. படித்தவர்களும் எப்படி அந்த கதைக்குள் ஊடுருவ முடியுமா என்று நினைப்பார்களோ, அப்படி இந்த உலகில் ஊடுருவ வைத்த ஜேம்ஸ் கேமரூன் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

கதையில் ஒன்றும் புதுமையில்லை. திரைக்கதையும் அஃதே. மசாலா படம் தான். ஒத்தைக்கு ஒத்தை ஃபைட்டும் உள்ளது. முதல் பாதியில் சில காட்சிகள் கொட்டாவி விட வைக்கின்றன. ஆனால், இந்த திரைக்கதையை காட்சிப்படுத்திய விதம்...நச்.

எல்லாவற்றையும் விட. இந்த படம் நம்மவர்கள் பார்க்க வேண்டிய ஒன்று. நம் நாட்டில் சொல்லப்படும் இதிகாச கதைகளில் சொல்லப்படும் கதைகளில் வரும் பாத்திரங்கள் போன்று வரும் விலங்குகள், பறவைகள் சிறுவர்கள் ஸ்பெஷல், Great Leonopteryx. எதற்காக அவதார்களுக்கு நீல வண்ணம் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்தியத்தன்மை கொடுக்கவா? தெரியவில்லை. ஜேம்ஸ் காமரூன், இந்த படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் தான் சிறிய வயதிலிருந்து படித்த காமிக்ஸ் கதைகளில் இருந்து வசீகரிக்கப்பட்டதாக கூறுகிறார்.




இந்த படத்தில் என்னை கவர்ந்த அம்சங்கள்...

என்னை பொருத்த அளவில், இந்த நாட்டில் வாழும் மக்களில் உண்மையான வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழும் மக்கள். இந்தியாவில் அவர்களை பழங்குடியினர் என்றும் மலைவாழ் மக்கள் என்றும் அழைக்கின்றோம். ஆனால், அவர்களை நாம் காட்டுவாசி என்று மட்டுமே நினைத்து பழக்கப்பட்டு விட்டோம்.

அவர்கள் மரங்களை வணங்குபவர்கள் தான். அவர்கள் விலங்குகளை வணங்குபவர்கள் தான். அவர்கள் நெருப்பை நேசிப்பவர்கள் தான். ஆனால், அவர்கள் மரங்களை வணங்குதல் என்பது இயற்கையை வணங்குதல். அந்த இயற்கையை தெய்வமாக நேசிப்பவர்கள். இயற்கையை நேசிப்பவர்கள் அதை அழிக்க விரும்ப மாட்டார்கள். அவர்களின் வாழ்க்கை முறைகளை அனைவரும் ஏற்றுக் கொண்டால், கோபன்ஹேகன்கள் தேவையே இல்லை. அவர்கள் உணர்வுடம் சம்பந்தப்பட்ட ஒரு மெகா மரத்திற்காக நடக்கும் போர் தான் படம்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை ஆதரிக்கும் விதமாக, மேற்கு உலகில் இருந்து வந்துள்ள படம் இது. இது இயற்கையை நேசிக்கும், வணங்கும் மக்களுக்கான படம். ஏனோ இந்த படத்தை வேறு கிரகத்தில் நடப்பதாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் பல வசனங்கள் வரும். "அவங்க அந்த மரத்தை விட்டு போக மாட்டேங்குறாங்க. அதை போய் கடவுளா வணங்குறாங்க" என்று நக்கலாக பேசும் வசனங்கள், அதை தொடர்ந்த சிரிப்பொலி. "அந்த மரத்தில் இருப்பது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. ஆனா, அத விட மாட்டேன்னு போர் புரியராங்க", "அங்க பாரு. ஒரு குண்டு போட்டதும் கரப்பான் பூச்சி போல கலஞ்சு ஒடுறாங்க" என்ற எள்ளல். கையில் காப்பி கோப்பையுடன் சினிமா பார்ப்பது போல பார்த்துக் கொண்டு அவர்களை குண்டு போட்டு அழிக்கும் காட்சிகள். இவர்களை நோக்கி நவிக்கள் வீசும் அம்புகளை கண்டு கொள்ளாத மனிதர்களின் அசட்டைகள் போன்றவை.

கடைசியில் அந்த மரங்களை மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டாலும், போரில் வெகு சீக்கிரமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இயற்க்கை உதவும் என்ற கருத்து முக்கியமானது. செடிகளிலும், மலர்களிலும், புல் தரையிலும் இருக்கும் ரேடியம்கள். அதில் நவிக்கள் நடந்து போகும் போது ஏற்படும் சொற்ப வினாடி கால்தடங்கள், கடலில் இருக்கும் ஜெல்லி மீன்களை போன்று வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஜந்துக்கள், தொட்டால் சுருங்கிவிடும் மெகா மலர்கள், பின் தொடப்போகும் முன்னரே சுருங்கும் மலர்கள், நவிக்களின் உணர்வுகளுடன் பேசும் மரங்கள், அந்த மரங்களில் இருக்கும் மூதாதயர்களின் நினைவுகள், அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக மொழி, தற்காப்புக்காகவே நவிக்கள் விலங்குகளை கொல்லுதல், இயற்கையை அவர்கள் நேசிக்கும் அதன் ஊடே வாழும் அவர்களின் வாழ்க்கை முறைகள் என்று எனக்கு பிடித்த அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் நவிக்கள் எப்படி இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்பதற்கான காட்சிகள். இப்படி பல அம்சங்களை இந்தியத்தன்மையுடன் ஒப்பிட்டு படம் பாருங்கள்.



கண்டிப்பாக இந்த படத்தை எல்லோரும் ரசிப்பார்கள், அதன் டெக்னிக்கல் அம்சங்களுக்காகவே.