Friday, March 09, 2012

Some Like It Hot (1959)

ஆங்கிலத்தில் வரும் நகைச்சுவைப்படங்கள் பெரும்பாலும் நமக்கு/எனக்கு பிடிப்பதில்லை. தமிழ் படங்களில் காமெடிகள் பெரும்பாலும் வசனத்தை ஒட்டியே வருபவை. ஸ்டான்டப் காமெடிகள் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்க்கலாம். அதுவும் கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்கள் வந்தவுடன் தான் இந்த ஸ்டான்டப் காமெடிகள் கொஞ்சமாவது வருகிறது. மதுரை முத்து அதில் கில்லாடி.

கவுண்டமனி காமெடி Satire வகை. பெரும்பாலும் இது ஒரு நெகடிவ் சமாச்சாரம். இதை இப்போ காப்பி அடிப்பது சந்தானம். அடுத்தவனை அடிக்கிறது, அவனை நக்கல் அடிப்பது, உருவத்தை வைத்து கிண்டல் அடிப்பது போன்றவை. வடிவேலு செய்வது Slapstic வகை காமெடி.

நிற்க. ஆங்கில நகைச்சுவை படங்களென்றால் நமக்கு தெரிந்தது சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி மற்றும் ஜிம் கேரி. எனக்கும் நிறைய ஆங்கில நகைச்சுவை படங்கள் பிடிப்பதில்லை. பார்த்த படங்களில் Genre-க்கள் 'காமெடி' என்று படிக்கும் போது மட்டுமே சிரிப்பு வரும். பொதுவாக அவை என்னை பொருத்த வரை Drama-க்கள். அந்த படங்களை அதன் கதைக்காகவும் மற்றும் இன்னபிற விஷயங்களுக்காவும் மட்டுமே பிடிக்கும்.

வழக்கத்திற்கு மாறான, இயற்கைக்கு அப்பாற்பட்ட படங்களை அவர்கள் காமெடி என்று வறையருக்கிறார்கள் போலும். ஜிம் கேரி நடித்த ஏஸ் வென்டுரா (Ace Ventura) படத்தில் செய்வதைத்தான் (சீரியஸாக) நம்ம நடிகர்கள் செய்கிறார்கள். பறந்து பறந்து காரை பார்க் செய்வது போன்று. ஆனால், நம்மூரில் அது ஆக்சன் படம். அங்கு அது காமெடிப்படம். தி மேட்ரிக்ஸ் அங்கு சீரியஸான படம். காரணம் ஹீரோ என்னதான் பறந்து பறந்து அடித்தாலும், அந்த கதாபாத்திரம் என்பது ப்ரோக்ராம் செய்யப்பட்டதால் அவ்வாறு சண்டை போட முடிகிறது. அதனால் நம்மால் அதை நம்ப முடிகிறது. ஆனால், பக்கத்து வீட்டு பையன் கேரக்டர் செய்யும் சிம்பு பறந்து பறந்து அடித்தால் நம்ப முடியுமா என்ன? ஜிம் கேரியின் காமெடிப்படங்கள் என்பதற்காக அவரும் 10 பேரை பறந்து பறந்து அடிப்பதில்லை. என்ன எழவுன்னா, கமெடிங்கிற பேருல இவங்க அடிக்கிற லூட்டி தான் தாங்க முடியாது (காமெடி, ஆனால் நிறைய அருவருப்பு + ஆபாசம் நிறந்த காமெடி படமென்றால் எனக்கு பிடித்தது Me, Myself & Irene. நிச்சயமாக சிரிக்கலாம்).

கதையை ஒட்டி வரும் காமெடிப்படங்களின் வரிசையில் ஆங்கிலத்தில் வந்த அந்த கால படம் Some Like It Hot.
படத்தின் போஸ்டர் - கொஞ்சம் கவனிங்க...
இது 1959-ல் வெளியிடப்பட்ட கருப்பு வெள்ளை திரைப்படம். படத்தை பற்றி படிக்கும் போது ஆஹா ஓஹோ என்று சொல்லப்பட்ட படம். ஆங்கில காமெடிகள் நமக்கு வெறும் ஸ்மைலை மட்டுமே வழங்கும். அதைத்தாண்டி விழுந்து விழுந்து சிரிக்க வைக்காது. ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்த படம் இது. படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால், சிரித்து ரசித்த படம், ஒவ்வொரு வசனமும், காட்சியும்.

கதையும் காமெடியும்: ஜோ-வும் (Tony Curtis) ஜெர்ரி-யும் (Jack Lemmon) கச்சேரிகளிலும் பார்களிலும் வாத்தியம் வாசிக்கும் இசை கலைஞர்கள், அன்றாடங்காய்ச்சிகள். முக்கியமாக "ஆண்கள்". அமெரிக்காவின் ப்ளோரிடாவில் 3 வாரத்திற்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. அவர்களின் வாத்தியங்கள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்கள் இல்லை. காரணம், அது பெண்கள் மட்டுமே பங்குபெரும் இசை நிகழ்ச்சி. என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கேங்வாரில் 7 பேர் கொல்லப்படும் படுகொலையை பார்த்து தொலைகிறார்கள் (Saint Valentine's Day Massacre). இவர்கள் தான் அதை பார்த்த சாட்சிகள். இவர்களையும் கொல்ல எத்தனிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர்.

3 வாரம் வேலை, சம்பளம், வேலை முடிந்ததும் நல்ல பொழுது போக்கு, முக்கியமாக ஒளிந்து கொள்ள இடம் - அதனால் பெண் வேடமிட்டு குழுவுடன் இரயிலில் ஃப்ளோரிடா செல்கின்றனர். ஜோ-வின் பெயர் இப்போது ஜோஸபின், ஜெர்ரியின் பெயர் ஜெரால்டின் (அப்புறம் அவராவே மாற்றிக்கொள்வது, டாஃபேன்).
முன்னால் நடந்து செல்லும் 'சுகர் கேன்' மன்றோவை பார்த்து பெண் வேடமிட்ட ஜெர்ரி, "look how she moves - it's like jello on springs - they must have some sort of a built-in motor. I tell you it's a whole different sex."
இரயிலில் 'சுகர் கேன்' மர்லின் மன்றோவை சந்திக்கின்றனர். சுகர் கேன் ஒரு குடிகாரி. (வேலை செய்யும் போது) தண்ணி அடிப்பது அதன் தலைவிக்கு பிடிக்காது. யாருக்கும் தெரியாமல் இரயிலில் தண்ணி அடிக்க, அந்த குழு தலைவியிடம் மாட்டிக்கொள்கிறாள் கேன். ஆனால், ஜெர்ரி (அ) ஜெராலடின் மன்றோவை காப்பாற்றுகிறான்(ள்). பின் சினேகமாகிறான். ப்ளோரிடாவில் சென்று இறங்கும் ஜோ, கேன் மீது காதல் கொண்டு அவளை வளைக்க, தான் ஒரு மில்லியனர், 3 கப்பல்கள் உள்ளன என்று அடித்து விடுகிறார். பணக்காரர் என்றவுடன் ஜோவை எப்படியாவது வளைத்துபோட வேண்டுமென்று முயற்சிக்கிறாள் கேன்.

இதற்கிடையில் பெண் வேடமிட்ட ஜெர்ரியை ஒரு பணக்காரர் காதலிக்க(!) அந்த காதலை 'பயன்படுத்தி' கொள்கிறான் ஜோ (தமிழ் படத்துல, ஏன் பொம்பள வேஷம் போட்ட ஒரு ஆணை, கட்டாயம், இன்னொரு ஆண் காதலிக்கிறார் என்பதற்கான விடை கிடைத்துவிட்டது). ஜெர்ரிக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தை ஜோ, கேனுக்கு கொடுப்பதும், ஜெர்ரிக்கு பரிசளித்த வைர நகையை ஜோ, கேனுக்கு பரிசளிப்பதாகவும் கதை நகர்கிறது.
ம்...செம ஃபிகரு...
பின், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வேறு 'வேலையாக' அந்த கேங் அங்கு வந்து தொலைக்க, instant-ஆக உடனே மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர் ஜோவும் ஜெர்ரியும். பின் நிறைய களேபரங்களுக்கிடையில் மறுபடியும் இன்னொரு படுகொலையில் வழக்கம் போல் சாட்சிகளாகின்றனர். இந்த முறை கொல்லப்படுவது அந்த ஒட்டுமொத்த கேங்குமே. ஜோ, ஜெர்ரி, கேன் மற்றும் அந்த பணக்காரர் (ஓஸ்குட்) எல்லோரும் ஒரு படகில் தப்பிக்கிறார்கள்.
"Well - nobody's perfect"
அந்த கடைசி 2 நிமிடங்கள் செம கலக்கல். ஜோ தான் பணக்காரன் இல்லையென்ற உண்மையை சொல்ல, கேன் தான் உண்மையிலேயே ஜோவை விரும்புவதாகவும் சொல்கிறாள்.

இந்த முறை ஜெர்ரியினுடையது. ஓஸ்குட் சலனமே இல்லாமல் நேராக பார்த்து படகை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ஜெர்ரி தான் ஓஸ்குட்டை ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை விளக்க முற்படுகிறான். ஜெர்ரி என்ன சொன்னாலும் ஓஸ்குட் விடுவதாய் இல்லை. தான் ஓஸ்குட்டின் தாயின் திருமண உடையை உடுத்த முடியாது, பொருந்தாது என்று சொல்ல சரிசெய்து கொள்ளலாமென்கிறார் ஒஸ்குட் (ஏற்கனவே ஓஸ்குட்டின் 'சில திருமணங்களில்!' பிரச்சினைக்குள்ளான உடை பிரச்சினை). "நான் நிறைய சிகரெட் பிடிப்பேன்" என்று ஜெர்ரி சொல்ல, சாதாரனமாக "ஐ டோன்ட் கேர்" என்கிறார் ஓஸ்குட். "3 வருஷமாக ஒரு சாக்ஸபோன் ப்ளேயருடன் சேர்ந்திருந்தேன்" என்று சொல்ல, "மன்னிக்கிறேன்" என்கிறார். "எனக்கு குழந்தைகளே பிறக்காது" என்று சொல்ல "தத்து எடுத்து வளர்த்துக்கொள்ளலாம்" என்கிறார். வெறுத்துப்போய் கோபமாக தன் தலையில் இருந்த விக்கை எடுத்து, "நான் ஒரு ஆண்" என்று ஒரு கத்து கத்த, ஓஸ்குட் நிதானமாக சலனமே இல்லாமல் "Well - nobody's perfect" என்ற அந்த உலகப்பிரசித்திப்பெற்ற டயலாக் சொல்கிறார், The End.

அந்த காட்சி...

சரி! கதை சாதாரண கதை தானே. இதில் என்ன பிரமாதம் என்கிறீர்களா? ஒன்றுமே இல்லாத படத்தை, அதை அளித்த விதம் அட்டகாசம். ஒவ்வொரு காட்சியிம் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

இந்த படத்தில் (கேனுக்கு அடுத்தபடியாக) கலக்கியிருப்பவர்கள் ஜெர்ரி மற்றும் ஓஸ்குட். ஜெர்ரியாக நடித்திருப்பவரை எங்கோ பார்த்தது போல் இருக்கே என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது அவருடைய 'தி அப்பார்ட்மென்ட்' திரைப்படம். அது மற்றுமொரு அருமையான திரைப்படம்.
"ஏய்...இந்த ட்ரஸ்ல நான் உன்ன விட ரொம்ப அல்லேகா இருக்கேனா?"
பெண்வேடமிட்டு அடிக்கும் கூத்துக்கள் அட்டகாசம். அதிலும் இரயிலில் கேன் தண்ணி அடித்து மாட்டிக்கொள்ள அவளை காப்பாற்றுகிறார் ஜெர்ரி. எல்லோரும் தூங்கியவுடன் நன்றி தெரிவிக்க கேன், ஜெர்ரியின் பெர்த்துக்கு வர, அங்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் பார்ட்டி ஏற்பாடாக விஸ்கி பாட்டிலை ஜெர்ரி எடுக்க, 'நான் கிளாஸ் எடுக்கிறேன்' என்று கேன் செல்ல, அதை இன்னொருத்தி பார்த்து 'என்னிடம் சைட்டிஷ் இருக்கு. நானும் கலந்துக்கறேன்' என்று அவள் இன்னொருத்தியை கூப்பிட, அப்படியே பரவி மொத்த கம்பார்ட்மென்ட்டும் சேர்ந்து கொள்ள, அந்த ரகளை செம Glass, I mean 'Class'.

படத்தின் ஸ்பெஷல்: மர்லின் மன்றோ

எல்லோரும் அவரை அழகி, கவர்ச்சி கன்னி என்று வர்னிக்கும் கதை நமக்கு தெரியும். அவரின் பரிதாபமான முடிவும் நமக்கு தெரியும். ஆனால், அவரை எல்லோரும் அழகி என்று ஏன் வர்னிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள இந்த ஒரு படம் போதும். வெறும் கவர்ச்சி மட்டும் அல்லாமல், நடிப்பு மற்றும் பாடுவது என்று பன்மொழிக் கலைஞர். நிஜமான திறமைசாலி.

மன்றோவின் கவர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது உடை. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது உடையும் அதை அணியும் விதமும் அதை expose செய்யும் விதமுமே அவரது அழகை சொல்லிவிடுகிறது. அவர் ஆடை அணியும் விதத்தை கொஞ்சம் elaborate-ஆ சொன்னாலும் அது ஆபாசமாக முடியும். எனவே வெண்திரையில் காண்க.
♫♯♪"I WANT TO BE LOVED BY YOU JUST YOU AND NOBODY ELSE BUT YOU" ♪ - செம பாட்டு...
இந்த படத்துல சில பாடல்கள் இருந்தாலும், இந்த "I wanna be loved by you" பாட்டு செம க்யூட். பாடலின் வரிகளும், ட்யூனும், மன்றோவும்...Chanceless...


1959-ல தானே படம் எடுத்தாங்க. அப்புறம் எதுக்கு ப்ளாக் & ஒயிட்? கலர்ல எடுத்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே! காரணம், கலர்ல எடுக்கும் போது ஜோ மற்றும் ஜெர்ரியின் மேக் அப் கொஞ்சம் போல அதிகமாக தெரிந்த காரணத்தால் ஸ்கிரீன் டெஸ்டுக்கு பிறகு கருப்பு வெள்ளைக்கு மாற்றிவிட்டார்கள் (#Wiki).


இந்த படம் 6 ஆஸ்கர் அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒன்றில் வெற்றி பெற்றது. இந்த படத்தை AFI என்னும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டின் பல பிரிவுகளில் முதல் 100 வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. காமெடியில் இது #1. சிறந்த படங்களில் 14வது இடம். குறிப்பிடத்தகுந்த வசன வரிசையில் 48 (வேறு எது? "Well - nobody's perfect" தான்).


அப்புறம் நம்மாளுங்க 1975-ல இந்த படத்தை 'தழுவி' Rafoo Chakkar-னு இந்தியில எடுத்துடாங்க. தமிழ்ல? அதான் நிறைய படங்கள்ல பாக்குறோமே...

படம் பாத்துட்டு சொல்லுங்க.